குருநாகல் பேருந்து நிலையத்திற்கு அருகில் வாளுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வாளுடன் அட்டகாசம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 15ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய, நேற்று (16) குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தலாவ, கலபாவெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்தின்போது சந்தேகநபரின் வசமிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் இன்று (17) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





