பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றை நாட்டை விட்டு வெளியேறுமாறு உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது மீளப்பெறப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் விசா மற்றும் நிரந்தர குடியிருப்பு தொடர்பில் உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் புதிய சட்ட நடைமுறைகளை அறிவித்து உள்ளார். இதன் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்த பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் தாதியர்களுக்கு சாதாரண முறையில் குடியுரிமை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக இலங்கைக்கு செல்ல தயாராக இருந்த குடும்பம் ஒன்று சட்டபூர்வமாக பிரித்தானியாவில் வாழும் உரிமையை பெற உள்ளது.
2022 இல் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்று முதியோர் பராமரிப்பு பணியாளராக பணியாற்றும் ரசிக சமரசிங்க குடும்பத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரணசிங்கவின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு முன்னர் உள்துறை அமைச்சு அனுப்பிய அறிவித்தலும் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது குறித்து ரணசிங்க கருத்து வெளியிடுகையில், “எனது மனைவியும் பிள்ளைகளும் இனி இங்கு இருக்க முடியாது என உள்துறை அமைச்சர் கூறிய போது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். தற்போது எனது பிள்ளைகள் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து பாடசாலைகளில் படிக்க முடியும் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றார்கள். இப்போது தான் நான் சுதந்திரமாக உணருகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கோவிட் காலத்தில் ஆட்கள் தேவைப்பட்டபோது மட்டுமே எங்களை மனிதர்களாக கருதினார்கள். அதன்பிறகு எங்களை குப்பை போல் தூக்கி எறிகிறார்கள் என லண்டனில் வசிக்கும் அனிஷா வில்லியம்ஸ் வேதனையுடன் கூறியுள்ளார். பத்து வருட விசா வழியில் பிரத்தானியாவில் வசித்து வரும் வில்லியம்ஸ் நிரந்தர குடியுரிமையை பெறுவதற்கு சில மாதங்களே இருந்தன. ஆனால் புதிய குடியுரிமை திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் வீட்டு வசதி நன்மைகளை கோரியதால், அவரது குடியுரிமை மேலும் பல ஆண்டுகள் தாமதமாகலாம் என கவலை வெளியிட்டு உள்ளார். புதிய விதிகளின்படி விண்ணப்பத்தாரர்கள் அரசாங்க நன்மைகளை சார்ந்திருக்காமல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கழித்திருக்க வேண்டும். இதனால் மிக கடினமான சூழலில் அரசாங்க உதவியைப் பெற்ற பல பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.





