கார் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கும், அதன் லீசிங் தவணைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தைத் தெளிவுபடுத்தத் தவறிய குற்றச்சாட்டில் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட அவர், இன்று (03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை, கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய அவருக்குச் சொந்தமான நவீன ரக கார் ஒன்றையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் கைப்பற்றியிருந்தது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரால், குறித்த காருக்கான லீசிங் தவணைக் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காரைக் கொள்வனவு செய்வதற்கும் அதன் தவணைகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




