ஜெர்மனியிலிருந்து அவசரமாக இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைச் சேர்ந்த குடும்பத்தில் தந்தையும் மகளும் அவசரமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்களின் தாய் மற்றும் நான்கு பிள்ளைகள், நகரமண்டபத்தில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 5:30 மணிக்கு, 20 பலத்த ஆயுதம் தாங்கிய கழகத்தடுப்பு பொலிஸார், லெவர்குசனில் உள்ள இலங்கை குடும்பத்தின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்தனர். இலங்கையில் வன்முறைச் சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய குடும்பம் ஒன்று, ஜெர்மனியில் புகலிடம் கோரியிருந்த நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.வீட்டுக்குள் புகுந்த அதிகாரிகள் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ளனர்.
உடைமைகளை சேகரிக்கக் கூட அனுமதியளிக்காமல் ஒரு பிரஷ் மட்டும் எடுத்துக்கொண்ட நிலையில், மின்னல் வேகத்தில் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது ஏற்பட்ட குழப்பத்தில் 15 வயது மகளை பொலிஸார் மறந்துவிட்டனர். இதனால் தாயும் ஏனைய பிள்ளைகளும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட போதிலும், தந்தையும் மூத்த மகளும் உடனடியாக விமான மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
லெவர்குசன் குடிவரவு அலுவலகம் இவர்களின் வதிவிட அனுமதி விண்ணப்பத்தை திட்டமிட்டு தடுத்துள்ளது. கடின உழைப்பு மற்றும் நல்ல ஒருங்கிணைப்பு இருந்தபோதிலும், அவசரமாக இந்த நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கை குடும்பம் நாடு கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லெவர்குசன் நகரமண்டபத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். பாடசாலைகளில் தாங்கள் கற்கும் ஜனநாயகம் நடைமுறையில் சிதைக்கப்படுவதாக அவர்கள் கண்ணீருடன் குற்றம் சாட்டினர். மனித உரிமைகளை வலியுறுத்தும் பாரபட்சமற்ற நீதியையும் கோரி மாணவர்கள் தீவிர முழக்கங்களை எழுப்பினர். ஜெர்மனியில் இன, மத ரீதியிலான அடக்குமுறைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று அவர்கள் ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர்.





