ஜேர்மனியில் எல்லைப் பகுதியில் வைத்து ஈழத்தமிழர் ஒருவர் உட்பட பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருமேனியாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட குறித்த ஈழத்தமிழர், ஜேர்மனியில் புகலிடம் கோரும் நிலையில், சட்டவிரோதமாக உள்ளநுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரியா வழியாக ஜேர்மனிக்குள் செல்ல முயன்ற லிக்தன் மற்றும் ஹார்ப்ரன்ஸ் எல்லைப் பகுதியில் செல்லப்படியாகும் அனுமதி இல்லாத நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிலனில் இருந்து நெடுந்தூர பேருந்தில் வந்த ஐந்து பேர் கொண்ட ஆப்கானிய குடும்பம் ஒன்று, ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகளால் புதன்கிழமை அதிகாலை கண்டறிந்து தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த ஆப்கானிய குடும்பத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, தந்தை வைத்திருந்த ஆப்கானிய அடையாள அட்டை போலியானது என்பது தெரியவந்ததுடன், அவர்கள் சட்டவிரோதமாக இத்தாலிக்கு கடத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 900 யூரோக்கள் பிணைத்தொகை விதிக்கப்பட்டதுடன், பின்னர் அந்த குடும்பத்தினர் மீண்டும் ஆஸ்திரியா நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
குறித்த பேருந்தில் பதுங்கியிருந்த 49 வயதான ஈழத்தமிழரும் சிக்கியுள்ளார். அவரிடமிருந்த கடவுச்சீட்டும் ருமேனிய வதிவிட அனுமதியும் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி குறித்த ஈழத்தமிழர் ருமேனியா நாட்டினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றைய தினம் மியூனிச்சிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.




