கனடாவில் ஈழத்தமிழரான மதி என அழைக்கப்படும் குலதுங்கன் மதிசூடியன் என்பவரின் படுகொலையில், பிரதான சூத்திரதாரியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த அவரது மகன் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மனநல பாதிப்பு காரணமாக இந்த கொலையை செய்ததாகவும், அவரை குற்றவியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் நேற்றைய முன்தினம் நீதிமன்றம் அறிவித்தது.
2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் திகதி ரொறன்டோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து, தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மதிசூடி படுகொலை செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் அரியா லையை பிறப்பிடமாகக் கொண்ட 66 வயதான மதிசூடி, கனடிய தமிழ் வானொலி மற்றும் பத்திரிகை துறையில் பிரபலமானவர் ஆவார்.
இந்நிலையில் நேற்றைய முன்தினம் ரொறன்டோ நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி, 32 வயதான இளங்கோ மதிசூடி பல்வேறு காரணங்களால் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் செய்த கொலையை சரியான மனநிலையில் புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இளங்கோ தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “மாறுபட்ட ஒரு நரக உலகத்தில் வாழ்வதாகவும், அங்கு வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிய கோட்பாடுகள் கிடையாது” எனவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிராக தந்தை செயல்பட்ட காரணத்தால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.
“தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் செய்தேன். எனினும் அது நான் இல்லை. கார் சார்ஜ் செய்யும்போது எனக்கு கோபம் வந்தது, ஆனால் அது நான் அல்ல; நான் அதை கட்டுப்படுத்த விரும்பினேன்” என இளங்கோ தனது மனநிலையை விவரித்துள்ளார்.
தன்னை ஒரு தீய சக்தி வழிநடத்தியதாகவும், அதன் உத்தரவுக்கு அமையவே தந்தை மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் கடுமையான மனநல பாதிப்பு மற்றும் பிரமைகள் காரணமாகவே இளங்கோ இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும், தன் செயல்களின் தவறுகளை அவரால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொலைக் குற்றச்சாட்டினடிப்படையில் இளங்கோவை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, கடுமையான மனநல மருத்துவ சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





