அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட இனந்தெரியாத ஆண் சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, குறித்த சடலம் சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞனுடையது என அவரது உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நூர்டீன் சர்ஜூன் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.
மரண விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் இளைஞனின் ஜனாஸா மேலதிக இறுதிக்கிரியைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





