சாவச்சேரியில் லண்டன் அண்ணனுக்கு துரோகம் செய்த தம்பி! பணத்துக்காய் சோரம்போகும் இரத்த பாசம்.!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
சாவச்சேரியை சேர்ந்த அண்ணன் தம்பி தொடர்பான சம்பவமே இது. அண்ணன் லண்டனில் நிரந்தரமாக வசித்து வருகிறார். தம்பி சாவச்சேரியில் பரம்பரை வீட்டில் வசித்து வருகிறார். இருவருக்கும் தந்தை வழி முதுசமாக காணித்துண்டு இருந்துள்ளது. தாய் தந்தை மறைவுக்கு பிறகு அதை சமமாக இருவரும் பிரித்து தத்தமது பெயர்களில் எழுதிக் கொண்டார்கள்.
தனது காணித்துண்டில் ஆடம்பர வீடொன்றை கட்டத் திட்டமிட்டார் அண்ணன். கடந்த 2024 ஆண்டு தொடக்கத்தில் இலங்கை வந்த அவர், வீடு கட்டும் திட்டத்தை தம்பியிடம் சொல்லி, அதை கட்டும் பொறுப்பை அவரிடம் கொடுத்து பணம் அனுப்புவதாக சொல்லிச் சென்றார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் வீடு தொடர்பான திட்ட வரைபடம் அண்ணணுக்கு அனுப்பப்பட்டு, அதில் சில மாற்றங்களை செய்து இறுதியில் திட்டம் கட்டடமாக உருப்பெற தொடங்கியது. பகுதி பகுதியாக பணம் அனுப்பப்பட, கட்டட வேலையும் தம்பியால் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு புகைப்படங்களும் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தன் எண்ணப்படி வீடு கட்டப்படுவதை எண்ணி மகிழ்ந்திருந்தார் அண்ணன். டைல்ஸ், பிட்டிங் அனைத்தும் உயர்தரத்தில் பெரும் பணச்செலவில் மிக ஆடம்பரமாக கட்டிமுடிக்கப்பட்டது வீடு.
புகைப்படங்களில் வீட்டை பார்த்து மகிழ்ந்தார் அண்ணன்.
இவ் வருடம் அண்ணன் இலங்கை வந்ததும் குடிபுகுதலை விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த மாதமளவில் தனது குடும்பத்துடன் இலங்கை வர திட்டமிட்டார் அண்ணன். தம்பியும், தான் விமான நிலையம் வந்து அழைத்துச் செல்வதாக கூறியிருந்தார். லண்டன் விமானத்தில் ஏறும் வரை தொடர்பிலிருந்த தம்பி, அண்ணன் இலங்கை வந்திறங்கியதும் விமானநிலையத்தில் இருந்து தொலைபேசி அழைப்பெடுத்தபோது தம்பியின் தொலைபேசி Off செய்யப்பட்டிருந்தது. அவரின் மனைவியின் தொலைபேசியும் இயங்கவில்லை.
குழம்பிப் போனவர், வாடகைக்கு வாகனம் ஒன்றை எடுத்து ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கும் அவர் தம்பி வசித்துவந்த பரம்பரை வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் எங்கே போனார்கள் என தெரியவில்லை. சந்தேகம் கொண்ட அண்ணன் உடனடியாக சற்று தள்ளி அமைந்திருந்த தனது வீட்டை பார்க்க சென்றார்.
சென்றவருக்கு அதிர்ச்சி…. இவர் ஆசை ஆசையாக பார்த்துக் கட்டிய வீடு தம்பியின் காணியில் கட்டப்பட்டிருந்தது. துரோகத்தை எண்ணி உடைந்துபோனார் அண்ணன்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஒன்றும் செய்யாமல் அடுத்த நாளே விமானத்தை Book செய்து லண்டன் சென்றுவிட்டாராம்.
தம்பியின் வாழ்க்கையை கெடுக்கக்கூடாது என்று நினைத்திருப்பார் போலும்.
தற்போது இந்தச் சம்பவம், அண்ணனின் மனைவியின் உறவினர்கள் மூலம் கசிய தொடங்கியுள்ளது.

