புதினங்களின் சங்கமம்

அந்தக்காலத்து மாவட்ட அபிவிருத்திச் சபையும் இந்தக் காலத்து கேவலமான சபையும்!! வீடியோ எடுப்பவர்களை அடித்து துரத்தனுமா?

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
யாழ்க் குறள்.
————————
‘காண்மை அகற்றிக் கூடும் சபைநிலை;
ஆக்கம் அறத்தொடு பயன்’.
பொழிப்புரை:-
காணொளியாளர் ( யூட்டியூப்பர்கள்)
இல்லாதபோது கூடும் அபிவிருத்திச் சபைக் கூட்டம் தரும நெறியுடன் நடைபெற்று மக்களுக்குப் பயன் தரும் சேவையை ஆற்றும்.
—————- ————- ———— ———–
1981 ஆம் ஆண்டு, ஜே.ஆர்- தமிழர் கூட்டணிப் பேச்சால் உருவான மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஒன்றான யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபையின் தலைவராயிருந்தவர் பொட்டர் நடராசா என்று அழைக்கப்பட்ட செனட்டர் நடராசா அவர்கள்.
பிற்காலத்தில் அவர் இனம்தெரியாத இளைஞர்களால் ‘பொட்டு’ வைக்கப்பட்டவர்.
தலைவராயிருந்த அவரது இடத்தை நிரப்பியவர் நடேசு இராசேந்திரம்.
யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டச் செய்திகளைச் சேகரித்தல் தொடர்பாக, பொட்டர் சில விதிகளை விதித்திருந்தார்.
படப்பிடிப்பாளர் சிட்டு,யாழ் லேக் கவுஸ் ஊடகவியலாளரான கதிரவேல் கொழும்பு ஸ்டுடியோ மட்டுமே படங்களை எடுக்கலாம்.
பத்திரிகைகள் கொழும்பு ஸ்டூடியோவிலிருந்து படங்களைப் பெறலாம்.
செய்தி சேகரிப்பதற்கு அதாவது உள்ளே நிகழும் உரைகளை எழுதுவதற்கு நானறிந்தளவில் ஈழநாடு அலுவலக நிருபர்கள் ஏ. மாணிக்கம், கா. யோகநாதன், தினகரன் – செல்வராஜா, தினபதி கே.அரசரத்தினம், வீரகேசரி செல்லத்துரை அவரைத் தொடர்ந்து கனக அரசரத்தினம் ஆகியோரே அனுமதிக்கப்பட்டனர்.
தலைவர் நடராசாவின் விதிகளில் முக்கியமானது அங்கு இடம்பெறும் நிகழ்வுகளை நிருபர்கள் டேப் ரெக்கோடரில் ஒலிப்பதிவு செய்ய முடியாது என்பதாகும்.
பொட்டர் நடராசா சபைக்கு வரும்போது சபை வெகு அமைதியாகி விடும்.
பாராளுமன்றம் கூட அப்படியில்லை- என்பர். செனட்டராக இருந்தவர் அல்லவா?
இலங்கையின் மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் சிறந்த நிருவாகம் என்ற பெயரை யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராசேந்திரம் தலைவராயிருந்த
காலத்திலும் இந்த ஒழுங்கு பின்பற்றப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க ஒருமுறை குறிப்பிட்ட கதை இது.
செனட்டர் நடராசா மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்கள் போதாமை பற்றி அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தனவை அடிக்கடி சந்தித்து சண்டை பிடிப்பாராம்.
ஒருமுறை அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வரும்போது எதிரே வந்த ரணிலிடம் ‘மாமாவுக்கு சொல்லும் நாங்கள் இக்கட்டான நிலையில் உள்ளோம் என்று ‘ எனக் களைப்பும் கோபமும் கலந்த தொனியில் சொன்னாராம்.
சிறிது காலத்தில் அவர் இனந்தெரியாத இளைஞர்களால் -சுட்டுக் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
1988 இல் மாகாண சபைகள் உருவான போதும் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தெரிவாகி முதலமைச்சரான வரதராஜப் பெருமாள் சுமார் ஐம்பது
க்கும் அதிகமான தடவை ஜனாதிபதி ஜே.ஆரைச் சந்தித்துக் கடுமையாக விவாதித்ததாக மூத்த ஊடகவியலாளர் த.சபாரத்தினம் தெரிவித்தார். எல்லாம் மாகாண சபையின் அதிகாரத்துக்காகத்தானாம்.
பொட்டரும் வரதரும் ஜே.ஆருடனும் டிக்சிற்றுடனும் சண்டை பிடித்தது அதிகாரத்துக்காகத்தான். அவை ‘கௌரவமான’ சண்டைகள்.
நாங்கள் இன்று காணும் சண்டைகள்…?
யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான தேர்தல் நடந்தபோது எமது செல்வமான யாழ் நூலகத்தின் 90 ஆயிரம் நூல்களை இழந்துள்ளோம் என்பதையும் இங்கு நினைவூட்டல் வேண்டும்.
இன்று யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் நடைபெறும் சண்டைகளுக்கும் அன்று பொட்டரும் வரதரும் நடத்திய சண்டைகளுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது? என்பதை சிந்தித்துப் பாருங்கள் .
அன்று அவர்கள் நடத்திய சண்டைகள் காணொளிகளாக இருந்திருப்பின் அவை எமக்கு வரலாற்றுஆவணப் பெறுமதி மிக்க னவாய் அமைந்திருக்கும்.
இன்று நடக்கும் சண்டைகளின் காணொளிகள் தரும் வரலாற்றுப் பெருமை என்பது – நம்மை நினைந்து நம் இனத்தை நினைத்து நாம் வெட்கப்படுவதைத் தருவதை விட வேறொன்றுமில்லை.
காணொளிக் காரரை நினைத்தே இந்தக் கூட்டங்களில் சிலர் இடையூறு செய்வதும் அதன் விளைவாகப் பல காணொளிகள் தோன்றுவதுமாகத் தெரிகிறது.
சிலர் இவற்றில் ஆர்வமுடன் நடிக்கும் வழமையான கதாநாயகர்களாவதுடன்
ஏனையவர்களையும் குணசித்திர நடிகர்களாயும் வில்லன்களாயும் ஆக்கிவிடுவதைக் காண்கிறோம்.
எனவே முதலில், காணொளியாளர்களை ( யூட்டியூப்பர்களை) உள்ளே அனுமதிக்காமல் கூட்டங்களை நடத்துவதுடன்,
பொட்டர் நடராசா போன்று சபைத் தலைவரும் செயற்பட்டால்…
சபையும் பயன்பெறும். மக்களும் பயனுறுவர்!