சி.சி.என் பிரதி
இலங்கையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பெளத்த பிக்குகள் மீது பாலியல் குற்றச்சாட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுவும் சில விகாரைகளின் தலைமை விகாராதிபதிகளாக இருப்பவர்களும் சமூகத்தில் கடந்த கால ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்களிடம் தொடர்பு வைத்துள்ள பிரபலமான பெளத்த பிக்குகளே இவ்வாறான பாலியல் சம்பவங்களில் குற்றவாளிகளாக சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவங்களின் போது பொது மக்களாலேயே அவர்கள் கையும் மெய்யுமாக பிடிபட்டமை முக்கிய விடயம். இலங்கை பெளத்த நாடு என்ற கோஷத்தை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் கடந்த சில வருடங்களாக முனைப்புடன் செயற்பட்ட பெளத்த பிக்குகளை கடவுளாக வழிபட்டு வந்தனர் சிங்கள பெளத்த மக்கள். இன்று அவர்களின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் பிரதான பிரிவினராக அவர்களே முன்னிற்கின்றனர்.
கடந்த காலங்களில் இனவாதம் பேசி வந்த கடும் போக்கு அமைப்புகளின் பிக்குகளை இந்த சிங்கள மக்கள் வரவேற்றனர். அதை விரும்பினரும் கூட. எந்த சிங்கள மக்களும் இனவாதம் பேசுவது பெளத்த தர்மத்துக்கு சரியா என எதிர்த்து ஒரு வார்த்தை கேட்கவில்லை. தேசியவாதம் மற்றும் இனவாத கருத்துக்களை கக்கி வந்த பிக்குகள் குறித்து சில அரசியல்வாதிகளும், புத்தி ஜீவிகளும் மாத்திரமே விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
இனங்களிடையே நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் வெறுப்பு பேச்சுக்களை பேசி வந்த ராஜங்கனே சத்தரார்த்தனே தேரரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு சிங்கள மக்கள் மத்தியில் எந்த பிரதிபலிப்புகளும் எழவில்லை. ஏனென்றால் கோட்டாபய ஆட்சிக்குப்பிறகு இலங்கை வாழ் சிங்கள பெளத்த மக்கள் மனதில் நல்லுறவு குறித்த சில நல்ல சிந்தனைகள் உருவாகி வருகின்றதோ தெரியவில்லை.
ஆனால் இப்போது பிக்குகள் இனவாதம் பேசுவதை விடுத்து தமது நாட்டத்தை வேறு வழிகளில் காட்டி வருகின்றமை முக்கிய விடயம்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பான் விகாரையொன்றின் தங்கும் அறையில், இளைஞர் ஒருவரை கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று தனது பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டில் சிஹல ராவய எனும் அமைப்பின் பொதுச்செயலாளரும் இலங்கை பெளத்த சிங்களவர்கள் மத்தியில் பிரபலமானவருமான மாகல்கந்தே சுதந்த தேரர் குறித்த சம்பவ இடத்திலேயே சிங்கள பெளத்தர்களால் தாக்கப்பட்டார். குறித்த விகாரையின் மற்றுமொரு பிக்குவும் தாக்கப்பட்டமை முக்கிய விடயம்.
இது தொடர்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவி இலங்கை வாழ் சிங்கள பெளத்த மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. மாகல் கந்தே சுதந்த தேரர் பல நாடுகளுக்கு உல்லாசப்பயணி போன்று பயணங்களை மேற்கொள்பவர். அதுதொடர்பான படங்களை தனது பேஸ் புக் தளத்தில் பதிவேற்றி பலரினதும் விமர்சனங்களை எதிர்கொண்டவர்.
ஆனால் இவ்வாறானவர்கள் பெளத்த தர்மத்துக்கு எதிராக செயற்படுகின்றனர் என்பதை இலங்கையில் உள்ள பிரதான பெளத்த பீடங்கள் எப்போதும் வாய் திறந்து கூறியதில்லை.
மாகால்கந்த சுதந்த தேரரின் சம்பவம் இடம்பெற்ற சில நாட்களிலேயே இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் நிலைகுலையச்செய்த சம்பவமே பல்லேகம சுமன ஹிமி என இலங்கையின் உயர் மட்ட பிரமுகர்களின் செல்வாக்குப் பெற்ற பிக்குவின் பாலியல் சம்பவ காணொலி.
தனது பெளத்த சிந்தனை உரையாலும் மென்சுபாவத்தாலும் அனைவரையும் வசீகரித்த ஒரு பிக்குவே சுமன ஹிமி என்பவர். இவர் இனவாதம் பேசாத ஒருவராக வலம் வந்தமை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அவருக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்த காரணமாகியது. ஆனால் அவரின் மோசமான மறுப்பக்கமும் இப்போது பொதுவெளியில் நாறி விட்டது.
அவரது பிரத்தியேக அறையில் இருந்த நடுத்தர வயது பெண்ணும் இருபது வயது மதிக்கத்தக்க மற்றுமொரு யுவதியும் தேரரும் அரை நிர்வாண நிலையில் இருந்ததை கண்ட பிரதேசவாசிகள் மூவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். மட்டுமின்றி மூவரினதும் ஆடைகளை களைந்து கையடக்கத்தொலைபேசி மூலம் வீடியோ பதிவெடுத்து அவற்றை சமூக ஊடகங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
இது நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்தது மாத்திரமின்றி இரு பெண்களின் ஆடைகளை களைந்த சம்பவத்தை பலரும் கண்டித்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் சுமன தேரரின் ஆடையும் களையப்பட்டு அவர் அறைக்குள் வந்தவர்களால் கடுமையாக தாக்கப்பட்ட காட்சி பலரை ஆத்திரமுரச் செய்திருந்தது. குறித்த சம்பவத்தில் அறைக்குள் இருந்த மூவரையும் தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது முக்கிய விடயம்.
இதேவேளை இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் நாவலப்பிட்டிய பகுதி விகாரை ஒன்றில் உள்ள மூன்று இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவ் விகாரையின் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் குறித்த இளம் பிக்குகள் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையிலுள்ள பெளத்த விகாரைகளில் உள்ள இளம் பிக்குகள் பல சந்தர்ப்பங்களில் அங்குள்ள ஏனைய பிக்குளால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகின்றது.
ஆனால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது இதை தடுப்பதற்கான பொறிமுறைகளை வகுக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. 2500 வருடங்கள் பழமையான பெளத்த தர்மமானது இலங்கை நாட்டிலேயே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டு அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றது. இந்த பெருமைகளை அண்மைக்காலமாக சில பெளத்த பிக்குகள் சிதைத்து வருகின்றனர்.
எதற்கெடுத்தாலும் இது பெளத்த நாடு என்றும் ஏனைய மதத்தவர்கள் அவர்களின் கீழேயே வாழ வேண்டும் என இனவாதம் பேசி வருவோர், பெளத்த தர்மத்தை காத்து வரும் அரும்பணியை செய்து வரும் சில பிக்குகளின் அண்மைக்கால செயற்பாடு குறித்து பேசாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. எது எப்படியானாலும் இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து பெளத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டு சிக்கி வருகின்றமை இலங்கை வாழ் சிங்கள பெளத்தர்கள் மத்தியில் இழுக்கை உருவாக்கியுள்ளது.





