புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

ஆஸ்திரேலியா படிப்படியாக ஆசியாவாக மாறிவருகிறது என்கிறார் மலேசிய பிரதமர்!

ஆசிய நாட்டவர்களின் தொடர்ச்சியான குடியேற்றத்தினால் ஆஸ்திரேலியா தனது ஐரோப்பிய அடையாளத்தை இழந்து ஆசிய அடையாளத்திற்குள் படிப்படியாக அடைக்கலமாகிவருவதாக மலேசிய பிரதமர் மகதிர் முகமட் தெரிவித்துள்ளார்.

பாங்கொக் நகரில் நடைபெறுகின்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கும் அவர் அங்கு The Age பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியா ஒரு காலத்தில் ஐரோப்பிய காலனியாக்க நாடாகவே கருதப்பட்டது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியர்கள் என்னதான் வெள்ளையின கொள்கைகளை தாங்கள் கொண்டிருப்பதாக கருதினாலும் அந்த நாடு படிப்படியாக ஆசியர்களின் குடிப்பரம்பலினால் உள்வாங்கப்பட்டுவருகிறது. ஆஸ்திரேலியர்கள் தங்களது கலாச்சாரத்தையும் மொழியையும் தக்கவைப்பதற்கு முயற்சிசெய்தாலும் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் குடிசன ரீதியாகவும் அடையாளம் சார்ந்தும் ஆசியாவாகவே மாறப்போகிறது. அங்கு ஐரோப்பிய அடையாளம் படிப்படியாக தனது உறுதியை இழக்கப்போகிறது என்று மகதிர் முகமட் எதிர்வு கூறியிருக்கிறார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் பிரகாரம், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் பட்டியலில் உள்ள முதல் பத்துநாடுகளில் சீனா, இந்தியா, பிலிப்பீன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆஸ்திரேலியாவில் மலேசியாவை பூர்வீகமாக கொண்ட சுமார் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் பேர் வசிக்கிறார்கள். சுமார் 26 ஆயிரம் மலேசிய மாணவர்கள் கல்விகற்கிறார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
Follow