கனடாவில் வீடு விற்பனையாளர்கள் ஒப்பந்தங்களை இறுதி செய்ய தவறியதைத் தொடர்ந்து, வீடு வாங்குபவர்களின் லட்சக்கணக்கான டாலர் முன்பணத்தை திருப்பித் தரவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், ஸ்கார்பரோவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகர் நிறுவனம் ஒன்றின் பதிவை ஒழுங்குமுறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
இந்திரன் சுவாமி என்பவரால் நிர்வகிக்கப்படும் ‘லக்சரி ஹோம்ஸ் வேர்ல்ட் இங்க்’ (Luxury Homes World Inc.) நிறுவனத்திற்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனையடுத்து, ஒன்றாரியோ ரியல் எஸ்டேட் சபை கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி அந்நிறுவனத்தின் அனைத்து வங்கி கணக்குகளையும் முடக்கியதாக ‘குளோபல் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. எஞ்சியிருக்கும் நிதியைப் பாதுகாக்கவும், அனுமதியற்ற பணப் பரிமாற்றங்களைத் தடுக்கவும் இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரெக்கோ தெரிவித்துள்ளது. அத்துடன் நவம்பர் 17 ஆம் திகதி முதல் அந்நிறுவனம் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஐந்து லட்சம் டாலர் பெறுமதியான பரிவர்த்தனைகள் நிறைவடையாமல் போனவை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்க்கம் பகுதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்வதற்காக 50,000 டாலர்களை முற்பணமாகச் செலுத்திய குஷால் சுக்லா மற்றும் அவரது மனைவியாகியோரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தம் நிறைவடையாத நிலையில் தமது முற்பணமும் திருப்பித் தரப்படவில்லை என சுக்லா கூறியுள்ளார். கைக்குழந்தையுடன் இருந்த தாம் ஏற்கனவே வாடகை வீட்டை விட்டு வெளியேறுவதற்கான அறிவித்தலை வழங்கியிருந்ததால், தற்காலிக தங்குமிடத்தைத் தேடி அலைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, இந்திரன் பிரதிநிதித்துவப்படுத்திய விற்பனையாளரிடமிருந்து வீடு வாங்க ஒப்பந்தமிட்ட இடயலா அலி என்பவருக்கும், அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஒப்பந்தம் நிறைவடையாத போதிலும் இன்று வரை முற்பணம் திருப்பித் தரப்படவில்லை. ‘லக்சரி ஹோம்ஸ் வேர்ல்ட்’ நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டு விற்பனை வரலாற்றை ஆராய்ந்த போது, குறைந்தது 10 வாடிக்கையாளர்கள் இவ்வாறு 20,000 முதல் ஒரு லட்சம் டாலர்கள் வரை முற்பணத்தை இழந்து தவிப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், ஸ்டேப்ரோவில் இயங்கிய அந்நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டு தற்போது அங்கு அச்சகம் ஒன்று இயங்குகின்றது. நிறுவனத்தின் சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்திரன் சுவாமியைத் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. முற்பணங்களுக்கு ரெக்கோ காப்பீடு வழங்குவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்புள்ள போதிலும், இந்திரன் சுவாமி மீது விசாரணை நடத்தி அவரைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்துகின்றனர்.


