Home புதினங்களின் சங்கமம் யாழில் இரு சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!! அவதானம் மக்களே!!

யாழில் இரு சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!! அவதானம் மக்களே!!

ஆபத்தான நீர்நிலைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ள யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி , யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

வடக்கில் அண்மையில் பெய்த மழையினால் கிணறுகள், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அதிகளவு நீர் தேங்கி நிற்கின்றது.

இந்நிலையில் சிறுவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

கடந்த வருடமும் இதே காலப்பகுதியில் நீர்நிலைகளில் தவறி விழுந்தும், குளிக்கச் சென்றபோதும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது நம் அனைவரினதும் பொறுப்பாகும்.

குறிப்பாகப் புங்குடுதீவு, காரைநகர் போன்ற பகுதிகளில் பாதுகாப்பற்ற திறந்த கிணறுகள் அதிகளவில் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் அவை நீரால் நிரம்பும்போது ஆபத்தை எளிதில் அடையாளம் காண முடியாமல் போகலாம். எனவே சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் இவ்வாறான இடங்களை உடனடியாக அடையாளம் கண்டு, பாதுகாப்பு வேலிகள், மூடிகள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகள் போன்ற பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனைய பகுதிகளிலும் இத்தகைய ஆபத்தான கிணறுகள் அல்லது நீர்நிலைகள் காணப்பட்டால், அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவ வேண்டும்.

பெற்றோர்களும் தமது பிள்ளைகளை நீர்நிலைகளுக்கு அருகில் தனியாகச் செல்ல அனுமதிக்காமல் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்.

ஒரு சிறிய முன்னெச்சரிக்கை ஒரு உயிரைக் காப்பாற்றலாம்.விழிப்புடன் இருப்போம் – நீரில் மூழ்கி ஏற்படும் அநியாயமான உயிரிழப்புகளைத் தவிர்ப்போம்.

யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவப் பிரிவில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நீர்நிலைகளில் தவறுதலாக வீழ்ந்து உயிரிழந்த சம்பவங்கள் கவனத்திற்குரியதாக உள்ளன.

கிடைக்கப்பெற்ற பதிவுகளின்படி, இவ்விரு ஆண்டுகளிலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் ஆவர். உயிரிழந்தவர்களின் வயது 6 முதல் 71 வயது வரை காணப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டில் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 3 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். ஆண்களின் வயதுகள் 8, 39, 71 ஆகவும், பெண்களின் வயதுகள் 28, 36, 58, 60, 65 ஆகவும் காணப்படுகின்றன.

2026 ஆம் ஆண்டில் 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 6 பேர் ஆண்கள், ஒருவர் பெண். ஆண்களின் வயதுகள் 6, 26, 33, 51, 52, 71 ஆகவும், பெண்ணின் வயது 66 ஆகவும் உள்ளது.

இந்தச் சம்பவங்களை அவதானிக்கும்போது, குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பற்ற கிணறுகள் அல்லது ஏனைய நீர்நிலைகளில் தவறி வீழும் அபாயம் காணப்படுகின்றது.

குறிப்பாக 6 மற்றும் 8 வயதுடைய சிறுவர்களின் உயிரிழப்புகள், குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அருகில் கண்காணிப்பின்றி விளையாட அனுமதிப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்தை நினைவூட்டுகின்றன.

அதேவேளை, வயதானவர்களில் சிலர் மதுபோதையில் இருக்கும்போது நீர்நிலைகளுக்கு அருகில் சென்று தவறுதலாக வீழ்வதற்கான அபாயமும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே மதுபோதையில் உள்ளவர்கள் கிணறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்ப்பதும், குடும்பத்தினர் அவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments