கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.
இவ்வாறான சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவ்வித முறைப்பாடும் கிடைக்கவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டு இலங்கை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
விகாரமகாதேவி பூங்காவில் நேற்று சனிக்கிழமை பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, சுவசெரிய அவசர நோயாளர் காவுவண்டி சேவை மூலம் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த மோதலின்போது பொலிஸார் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மீது தாக்குதல் நடத்தினர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளைப் பொலிஸார் நிராகரித்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டத்தைத் தொடர்வதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை விகாரமகாதேவி பூங்காவிற்குத் தமது போராட்டத்தை மாற்றியிருந்தனர்.
தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாகப் பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்




