கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேர், ஜனாதிபதி செயலக வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருப்பதற்குத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், நீதிமன்ற உத்தரவை பிக்குகளுக்கு உரக்க வாசித்துக் காட்டினர்.
இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவிய போதிலும், உத்தரவில் பெயர் குறிப்பிடப்பட்ட பிக்குகள் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு இணங்க அங்கிருந்து வெளியேறினர்.
ஆனால், அடுத்ததாக அவர்கள் எடுத்த முடிவுதான் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிக்குகள், இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக நேரடியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மகா சங்கத்தினரின் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு காலி வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில், பொருத்தமான நேரத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தகுந்த முடிவை எடுப்பார் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்ட பிரதமர், நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.





