கனடாவின் டொராண்டோ நகருக்கு உட்பட்ட நார்த் யார்க் பகுதியில், முதியவர்களிடம் இருந்து கைப்பைகளை திருடிய குற்றச்சாட்டில் 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில், வெஸ்டன் வீதி மற்றும் லாரன்ஸ் அவென்யூ வெஸ்ட் பகுதிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற குறித்த பெண், இத்த திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக டொராண்டோ போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொள்வனவு வண்டிகளில் கைப்பைகளை வைத்துவிட்டு கவனக்குறைவாக இருக்கும் முதியவர்களை இலக்கு வைத்து, அவர்களின் பைகளை திருடிக்கொண்டு அவர் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த 29 வயதுடைய அஷாந்தே விட்டேக்கர் என்ற பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். குறித்த பெண்ணுடன் சேர்ந்து மேலும் பலர் இவ்வாறான கொள்ளைகளில் ஈடுபடலாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
சந்தேக நபர் மீது கடன் அட்டையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை, மோசடி மற்றும் 5000 டாலருக்கு உட்பட்ட திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டு மேலும் சிலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், இது தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள், போலீசார் தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்





