அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் மூழ்கிய போது அவனை காப்பாற்றாமல் அலட்சியமாக இருந்த தமிழ் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஃளோரிடா மாநிலத்தில் உள்ள ஓவர்லேண்டோ பகுதியில் 7 வயதான குஷில் பாண்டே என்ற சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 48 வயதான லூசியானா பெண் மருத்துவர் சுகந்தினி சுப்பையா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பக்கத்து வீட்டு சிறுவர்களை நீச்சல் குளத்திற்கு அழைத்து சென்ற மருத்துவர் சுகந்தினி, சிறுவன் குஷில் நீரில் மூழ்கியதை கண்டபோதும் உடனடியாக உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளார். சிறுவன் 5 நிமிடங்களுக்கு மேலாக நீருக்கு அடியில் மூழ்கி உயிருக்கு போராடிய போதிலும், அவர் நீரில் இறங்கி அவனை காப்பாற்ற முற்படவில்லை என சிசிடிவி காட்சிகளின் மூலம் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இறுதியாக மற்றொரு நபரால் மீட்கப்பட்ட அந்த சிறுவன், மூளை சாவு ஏற்பட்டு சில நாட்களில் வைத்தியசாலையில் உயிரிழந்தார். விசாரணையின் போது தான் அதிர்ச்சியில் உறைந்து விட்டதாக அந்த தமிழ் பெண் மருத்துவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். எனினும் மருத்துவராக இருந்து கொண்டு சிறுவனை காப்பாற்றாமல் அலட்சியமாக இருந்த குற்றத்துக்காக சுகந்தினி மீது முதலாம் நிலை மனித படுகொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 மாத கால தீவிர விசாரணைக்கு பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.





