கட்டுநாயக்க விமான நிலைய சந்திப் பகுதியில் வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழ் மக்களை குறிவைத்து இயங்கும் சில ஆட்டோ ஓட்டுநர்களின் பகல் கொள்ளை குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 2:30 மணிக்கு கட்டுநாயக்க சந்திக்கு வர வேண்டிய பேருந்து தாமதமாக மாலை 3:30 மணிக்கு வந்து சேர்ந்தது.
அதில் லண்டன் செல்வதற்காக தனது பெற்றோருடன் வந்த பயணி ஒருவர் விமான நிலையத்திற்குச் செல்ல நேரமின்மையால் தவித்துள்ளார்.
மாலை 5:30 மணிக்கு விமானம் புறப்பட இருந்ததால், வேறு வழியின்றி அங்கிருந்த ஒரே ஒரு ஆட்டோவை அவர் நாடியுள்ளார்.
சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள விமான நிலையத்திற்கு செல்ல அந்த ஆட்டோ ஓட்டுநர் 5,000 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார்.
நேர நெருக்கடி காரணமாக அந்த பயணியும் வேறு வழியின்றி 5,000 ரூபாய் கொடுத்துச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வரும் வசதி படைத்த பயணிகள் தனியாரோ, வாடகை வாகனங்கள் மூலமோ விமான நிலையத்திற்கு நேராகச் சென்று விடுகின்றனர்.
ஆனால் சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் கொழும்பிலிருந்தோ அல்லது பிற பகுதிகளிலிருந்தோ பொது போக்குவரத்து பேருந்துகள் மூலமாகவே பயணிக்கின்றனர்.
இந்த பேருந்துகள் பயணிகளை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தையில் இறக்கி விடுவதால், பயணிகள் நள்ளிரவு நேரங்களில் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதைப் பயன்படுத்தி அங்குள்ள சில ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் அதிகப்படியான தொகையை வசூலித்து அநியாயக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயணிகள் தமிழில் பேசுவதையோ அல்லது அரைகுறை சிங்களத்தில் பேசுவதையோ அறிந்து கொண்டால், அவர்களின் அவசர நிலையைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கின்றனர்.
வழக்கமாக பிக்மீ (PickMe) அல்லது ஊபர் (Uber) பதிவு செய்தால் 300 முதல் 400 ரூபாய் வரை மட்டுமே வரும் கட்டணத்திற்கு, இவர்கள் 3,000 முதல் 5,000 ரூபாய் வரை அநியாயமாக வசூலிப்பதாகப் பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.





