பிரிட்டனில் உள்ள லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் வீடுகளுக்கு வரும் பார்சல்களைத் திருடும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனின் ஈஸ்ட் ஆக்டன் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் பொது மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பார்சல்களைத் திருடிய குற்றச்சாட்டில் 54 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 5-ஆம் தேதி கிராண்ட் கோர்ட் வளாகத்திற்கு விநியோகிக்கப்பட்ட சுமார் 40.59 பவுண்டுகள் பெருமதியான பார்சல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபரை கண்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 25-ஆம் தேதி சந்தேக நபரான பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வீடுகளில் திருடுதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மறுநாளே ஆக்ஸ்பிரிட்ஜ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப் பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு எதிர்வவரும் அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
பொருட்களின் பணப்பெறுமதி குறைவாக இருந்தாலும், திருட்டுச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பாதிப்பைக் கருத்திற்கொண்டு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகப் பகுதிப் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.





