Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாண யூடியூப்பருக்கு அழகிய பட்டதாரிப் பெண்ணுடன் ஒரு கோடி சீதனம் கேட்ட கல்யாண புரோக்கர் மீது...

யாழ்ப்பாண யூடியூப்பருக்கு அழகிய பட்டதாரிப் பெண்ணுடன் ஒரு கோடி சீதனம் கேட்ட கல்யாண புரோக்கர் மீது தாக்குதல் முயற்சி!

யாழ்ப்பாணத்தில் கல்யாண புரோக்கர் ஒருவர் தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பிப் பிழைத்துள்ளார்.

யாழ். கொக்குவில் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை, மோட்டார் சைக்கிளில் வந்த நடுத்தர வயதுடைய நபர் ஒருவர் துரத்திச் சென்றுள்ளார். இதன்போது, அந்த முதியவர் அருகிலிருந்த வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து தப்பியுள்ளார். இதனையடுத்து, துரத்தி வந்த நபரை அங்கிருந்தவர்கள் மறித்துப் பிடித்துள்ளனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதலுக்கு இலக்காகவிருந்த முதியவர் ஒரு திருமணத் தரகர் என்பதும், துரத்தி வந்த நபரின் சகோதரிக்கு பொருத்தமான மாப்பிள்ளையைத் திருமணம் முடித்துத் தருவதாகக் கூறி அவரிடமிருந்து ஏராளமான பணத்தைப் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது.

அவ்வாறு ஏமாற்றியதற்குப் பதிலாக, வேறு ஒரு மாப்பிள்ளையைத் தான் இலவசமாகப் பொருத்தித் தருவதாகக் கூறி அவர்களிடம் இருந்து அத்தரகர் தப்பியுள்ளார். பின்னர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் புகைப்படத்தைக் கொடுத்து, அவர் அமெரிக்க நிறுவனமொன்றில் ஆன்லைனில் பணிபுரிவதாகவும், அடிக்கடி அமெரிக்காவிற்குச் சென்று வருபவர் என்றும் கூறியுள்ளார். மேலும், யாழ்ப்பாணத்தில் இருந்தவாறே மாதம் 3,000 டாலர்கள் சம்பாதிப்பவர் எனக் கூறியதுடன், அவருக்குச் சீதனமாகக் காணியுடன் கூடிய வீடு, ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ஜாதகத்தையும் புகைப்படத்தையும் வழங்கி உள்ளார்.

இதன் பின்னர், பெண் வீட்டார் குறித்த இளைஞர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டபோது, அவர் ஒரு யூடியூப்பராக மட்டுமே இயங்கி வருவதும், வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பதும் தெரியவந்தது. பெண் வீட்டார் அவரது உறவினர்களைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டபோது, புரோக்கர் கூறியதை விடவும் யூரியூப்பர் தொடர்பாக அதிக பந்தாவுடன் பல தகவல்களைக் கூறியுள்ளனர்.ஒரு கட்டத்தில் ”அவனுக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்குக்கு தேர்தலில் போட்டியிட்டால் அடுத்த பாராளுடன்ற உறுப்பினராகவும் வருவான்” எனவும் கூறினார்களாம்.

இதனையடுத்து, கடுப்பான பெண்ணின் அண்ணன், புரோக்கரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடுமையாக எச்சரித்ததுடன், தாம் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். ஆனாலும், புரோக்கர் அவர்களுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டு, அப்பக்கமே செல்லாமல் இருந்துள்ளார். அப் பெண் வீட்டாரிடமிருந்து புரோக்கர் ஏறத்தாழ 2 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்நிலையில், கொக்குவில் பகுதியில் குறித்த புரோக்கர் நிற்பதைக் கண்ட பெண்ணின் அண்ணன் அவரிடம் செல்ல முயன்றபோது, புரோக்கர் அவரைத் தரக்குறைவாக ஏசியபடி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் அண்ணன் அவரைத் தாக்குவதற்காகத் துரத்திச் சென்றபோதே, புரோக்கர் கே.கே.எஸ். வீதியில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றினுள் புகுந்துள்ளார்.

இதன் பின்னர் அங்கிருந்தவர்கள் பெண்ணின் சகோதரரைச் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments