இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாதகல் J/150 சகாயபுரம் கிராமத்தில், ஒரு சிலரால் கசிப்பு காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல், கஞ்சா, போதை மாத்திரைகள் விநியோகம் செய்தல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதனால் அக்கிராமத்தில் வாழும் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த மனவேதனையுடனும் சிரமத்துடனும் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
DA7EF5E4-D735-4D2B-908C-52E68DFE8D25
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பலமுறை முறைப்பாடு செய்தும், அவர்கள் அலட்சியப் போக்குடனேயே செயற்பட்டு வருகிறார்கள்.
கடந்த 02.10.2026 அன்று இரவு நேரத்தில் சகாயபுரம் கிராமத்திற்கு இளவாலை மற்றும் கீரிமலைப் பகுதிகளில் இருந்து வாள், கத்திகள், தடிகள் போன்ற கூரிய ஆயுதங்களுடன் வருகை தந்த சிலர், வீதியை மறித்து இரு குழுக்களாகப் பிரிந்து சண்டையில் ஈடுபட்டனர். இதனால் பல மணித்தியாலங்கள் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர்.
பின்னர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பொலிஸார் விரைந்து வந்தபோது அடிதடியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். எனினும், பொலிஸார் ஒருவரைக் கைது செய்து சென்றனர். ஆனால், ஏனையோரை இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்.
மீண்டும் நேற்றைய தினமும் அவர்களின் நடமாட்டம் அப் பகுதியில் காணப்பட்டதினால், அவ்வூர் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர். இதில் வருகை தந்தவர்களில், கஞ்சா விற்பனையிலும் அடிதடிகளிலும் ஈடுபடும் ‘செக்கு’ எனப்படுபவரும் அவருடைய தம்பியும் அடங்குவர். இவர்கள் 7 மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





