கிளிநொச்சி பகுதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி வந்த நபரை இன்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் விரட்டி பிடித்து கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து கன்டெயினர் லொறி ஒன்றில் முத்திரை மரக்குற்றிகள் கடத்தி வரப்படுவதாக கொடிகாம பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
நீண்ட தூரம்
அதனை அடுத்து எழுதுமட்டுவாள் பகுதியில் குறித்த லொறியினை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சாரதி லொறியை தொடர்ந்து செலுத்தி தப்பியோடியுள்ளார்.
லொறியுடன் தப்பி சென்ற சாரதியை நீண்ட தூரம் பொலிஸார் துரத்தி சென்று மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியையும் , கைப்பற்றப்பட்ட லொறியையும் கொடிகாம பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற பொலிஸார் சாரதியிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
லொறியில் கடத்தப்பட்ட மரக்குறிகளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் எனவும் , சாரதியை மேலதிக விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





