பிரித்தானியாவின் லண்டனில், தனது முன்னாள் மனைவியால் கடத்தப்பட்ட 5 மற்றும் 3 வயதுடைய தனது இரு மகன்களையும் மீட்டுத்தர உதவுமாறு அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளார்.
இலங்கையின் பிரபல தேயிலை உற்பத்தி குடும்பத்தைச் சேர்ந்த 34 வயதான நிஷிகா சமரதுங்க என்ற பெண், தனது பிள்ளைகளான பிளேக் மற்றும் நடானியேலை கடந்த 6 மாதங்களாக மறைத்து வைத்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோவில் தந்தை பென் பெயரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த இந்த சிறுவர்கள், நீதிமன்ற உத்தரவின்படி தாயைச் சந்திப்பதற்காகக் கடந்த மார்ச் மாதம் பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால், சந்திப்புக்குப் பிறகு தாய் குழந்தைகளைத் திருப்பிக் கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளார்.
குழந்தைகளுக்குத் தாயால் ஆபத்து இருப்பதாகக் கூறி, அவர்களை உடனடியாக மீட்க அமெரிக்க மற்றும் பிரித்தானிய நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. மேலும், தாய் நிஷிகா குழந்தைகளைப் பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவர்கள், பாடசாலைக்கும் செல்லாமல் மருத்துவப் பராமரிப்பும் இன்றி ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தந்தையின் வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
MP4
தனது பிள்ளைகளின் பாதுகாப்பை மட்டுமே விரும்புவதாகக் கூறும் தந்தை, பிரித்தானிய பொதுமக்கள் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
2024-இல் விவாகரத்து பெற்ற இந்தத் தம்பதியினரிடையே, குழந்தைகளை லண்டனுக்கு அழைத்து வர நீதிமன்றம் மறுத்த நிலையிலேயே, தாய் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.
வங்கி கணக்குகள், மருத்துவமனைகள் மூலம் தேடியும் இதுவரை அவர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. குழந்தைகள் இருக்கும் இடம் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் தாய் இருந்த காலத்தில் குடும்ப வீட்டை வசிக்கத் தகுதியற்றதாகவும் பாதுகாப்பற்றதாகவும் மாற்றியதாக நீதிபதி சாடியுள்ளார். மேலும், தந்தைக்கு எதிரான பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பிள்ளைகளைச் சந்திப்பதைத் தடுக்க தாய் சதி செய்ததாகவும் கொலராடோ நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.








