நோர்வே அமைச்சரவையில் வரலாறு படைத்த ஈழத் தமிழ் பெண்!
புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரத்தினம் பதவியேற்பு
நோர்வேயின் தற்போதைய தொழிலாளர் கட்சி அரசு தனது அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த Jon Ivar Nygård மாற்றப்பட்டு,
புதிய அமைச்சரவையில் அத்துறையின் புதிய அமைச்சராக ஈழத் தமிழ் பெண்ணான கம்சி குணரத்தினம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் நோர்வே அமைச்சரவையில் இடம்பெறும் முதல் தமிழர் பின்னணியைக் கொண்டவர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஏற்கனவே நோர்வே நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முதல் தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கம்சி அவர்கள் இன்னும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறவில்லை என்ற தகவல் நோர்வே ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
எனினும், இது ஒன்றும் புதிய நிகழ்வல்ல; கடந்த 1997ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றிய Odd Einar Dørum அவர்களிடமும் ஓட்டுநர் உரிமம் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்து, தனது 5-6 வயதில் புலம்பெயர்ந்து நோர்வேயில் குடியேறியவர் கம்சி.
சிறு வயதிலேயே நோர்வேயின் தொழிலாளர் கட்சி ஊடாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர்,
படிப்படியாக முன்னேறி இன்று நாட்டின் மிக முக்கிய அமைச்சரவைப் பதவியை எட்டியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றில் மாபெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது இந்த நியமனம்.





