யாழில் லீவு நாளில் அலுவலகத்திற்கு அழைத்து பெண் உத்தியோகத்தர் சிந்துபிரியாவை பலியாக்கிய அரச அதிகாரி! நடந்தது என்ன?
உடுவில் பிரதேச செயலகத்தில் பெரும் சோகம்: சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
யாழ். உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த துயரச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30.08.2026) மாலை நடந்துள்ளது.
சம்பவத்தில் குறித்த அலுவலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயான நிசாந்தன் சிந்துப் பிரியா (வயது- 37) என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அரச அலுவலகங்களுக்கு இடையிலான உற்பத்தித் திறன் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு அலுவலகங்களை அழகுபடுத்தும் பணியில் குறித்த பிரதேச செயலகமும் ஈடுபட்டு வருகின்றது. நாளை திங்கட்கிழமை (31.08.2026) போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போதே குறித்த பெண் உத்தியோகத்தர் மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிய வேளை மின் கசிவு தண்ணீருடன் கலந்து அவரைத் தாக்கியதாகத் தெரிய வருகின்றது.
குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. எனினும், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


