மாத்தறை அரச மரத்தில் இரு வெளிநாட்டவர்கள் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
மாத்தறை, திஹகொட, பலோல்பிட்டிய பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் போதி மண்டபத்திற்கு முன்பாக அமைந்திருந்த வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு வெளிநாட்டவர்களின் சடலங்கள் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மத வழிபாடுகளுக்காக விகாரைக்கு வந்திருந்த பிரதேசவாசிகள் சிலர் சடலங்களைக் கண்டு, உடனடியாக திஹகொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய பிரான்ஸ் நாட்டவரும், 52 வயதுடைய ஸ்கொட்லாந்து நாட்டவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெலிகம, மிதிகம, குருபெபில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற அன்று காலை, ஹம்பாந்தோட்டை பகுதிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அவர்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்து ஒரு ஜோடி காலணிகள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அது வெலிகம பகுதியில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட ஒன்று என்பது தெரியவந்துள்ளது.
இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், அவர்கள் இவ்வாறான முடிவை எடுப்பதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சடலங்கள் தொடர்பாக பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மாத்தறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமாரவின் ஆலோசனையின் பேரில், திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

