நாளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணசபை முன் போராட்டம்!! எதற்காக ?
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு எதிரான சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை திங்கட்கிழமை 17ம் திகதி காலை 8 மணிக்கு கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை அலுவலகம் முன்பாக ஒன்றுகூடுமாறு யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அழைப்பில் வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் வி.விஜயரூபன்,
வட மாகாணத்திலே பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கக்கூடியவர்கள், அவர்களின் கீழான பிறிதொரு பதவி அணியினரை மிகவும் தரக்குறைவாக, இழிவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி அவர்களுக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாட்டினை செய்திருக்கிறார்கள்.
பிரதம செயலாளருடைய தலைமையில் கடந்த 7ம் மாதம் 7ம் திகதியன்று கூட்டப்பட்ட துறைசார் மீளாய்வுக் கூட்டத்தின் போது, அரச நிதியைப் பயன்படுத்தி, ஒரு அரச கடமை நேரத்திலே, ஒரு தொழில் பகுதியினரை மிக தரக்குறைவாக பேசிய சம்பவம் தொடர்பாக எங்களுடைய உத்தியோகத்தர்கள் பாரிய மன அழுத்தத்தோடு உள்ளார்கள்.
அந்த இடத்திலே இந்த விடயத்தைப் பேசிய நிர்வாக சேவை அதிகாரிகளிடம் நாங்கள் சொல்லிக்கொள்வது, இன்றைக்கு இலங்கைத் தீவிலே அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் தவிர்த்து எந்தவொரு செயற்பாட்டையும் செய்ய முடியாது என்ற நிலை நிலவுவது இந்த நாட்டிலே இருக்கக்கூடிய அரசியல்வாதிகளுக்கும் தெரியும், ஒட்டுமொத்த அரச இயந்திரத்துக்கும் தெரியும்.
இந்த மாகாண சபையினுடைய நிர்வாகக் கட்டமைப்பிடம் நாங்கள் ஒரு பலமான செய்தியை முன்வைத்து, எதிர்வரும் திங்கட்கிழமை நாங்கள் ஒரு போராட்டத்தை செய்யவிருக்கின்றோம்.
எங்களுக்கு தாபன விதிக்கோவையில் அளிக்கப்பட்டிருக்கக்கூடிய ஏற்பாடுகள், இந்த நாட்டின் அரசியலமைப்பிலே சொல்லப்பட்டிருக்கக்கூடிய ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்த போராட்டத்தை நடத்துவதற்கு முற்றுமுழுதான தகுதியும், அதற்கான முழு உரிமையும் எங்களுக்கு இருக்கிறது.
இந்த போராட்டத்தின் போது நீங்கள் முழுப்பேரும் ஒன்றுபட்டு, அன்றைய தினம் உங்களுடைய பலமான எதிர்ப்பை பதிவு செய்யக்கூடிய வகையில் நீங்கள் சுகயீன விடுப்பை எந்தெந்த வழிகளில் உங்களுடைய மேலதிகாரிகளுக்கு அனுப்ப முடியுமோ, அந்த முறைகளில் உங்களுடைய விடுப்புகளை விடுமுறைகளை அறிவித்து, முறையாக நீங்கள் வீட்டிலே தங்கியிருந்து இந்த பலமான எதிர்ப்பைக் காட்டுகின்ற அதே சமயம், மாகாண சபை கைதடியில் அமைந்திருக்கக்கூடிய மாகாண சபைக்கு முன்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை அன்றைய தினம் செய்யவிருக்கிறோம்.
ஆகவே, அன்று விடுப்பை அறிவிக்கின்ற உத்தியோகத்தர்கள் நீங்கள் கட்டாயமாக அந்த மாகாண சபைக்கு முன்னால் 8 மணிக்கு முன்னதாக ஒன்றுகூடி எங்களுடைய பலமான எதிர்ப்பினை நாங்கள் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
ஆகவே, இந்த போராட்டம் வருகின்ற திங்கட்கிழமையோடு நின்றுவிடப் போவது அல்ல. இதையும் தாண்டி நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவோடு கலந்துரையாடி வருகின்றோம். அந்தத் தளத்திலும் இந்த மேலதிகாரிகளுக்கு எதிரான செயற்பாடுகள் எங்களால் முன்னெடுக்கப்படும்.
உங்களுக்கு யாராவது சவால் ஏற்படுத்தக்கூடிய திணைக்களத் தலைவர்கள் இருப்பார்களாக இருந்தால், அவர்களுடைய குரல் பதிவுகளையும் அவர்கள் சார்ந்த விபரங்களையும் ரகசியமாக எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அவர்களை பொதுவெளியில் தோலுரித்துக் காட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் – என்றார்.
