‘லங்கா ஈ நியூஸ்’ (Lanka e News) இணையதளத்தின் ஆசிரியர் சந்தரு சேனாதீர கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது!
நீண்ட காலமாக வெளிநாட்டில் வசித்து வந்த ‘லங்கா ஈ நியூஸ்’ (Lanka e News) இணையதளத்தின் ஆசிரியர் சந்தரு சேனாதீர, இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் தடுத்து வைப்பு இடம்பெற்றுள்ளதாகக் காவற்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் கட்டுநாயக்க காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு ‘லங்கா ஈ நியூஸ்’ ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டதைத் தொடர்ந்தும், அந்த நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தீவைப்புச் சம்பவங்களை அடுத்துமே சந்தரு சேனாதீர தனது உயிராபத்து கருதி நாட்டிலிருந்து வெளியேறினார். கடந்த 16 ஆண்டுகளாக அவர் பிரித்தானியாவில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகத் தனது ‘லங்கா ஈ நியூஸ்’ இணையதளம் வாயிலாகக் கொள்கை ரீதியான வலுவான ஆதரவை வழங்கி வந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

