போதைப்பொருள் காவாலியிடம் 20 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற மறுத்த பொலிஸ் உத்தியோகத்தர் தமிழன் என்பதால் பொலிஸ் தரப்பு பம்முகின்றதா???
இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மற்றும் வாள் என்பவற்றுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். தங்களை கைது செய்வதை தடுப்பதற்காக பொலிஸ் புலனாய்வாளர் சுதர்சனுக்கு இலஞ்சம் கொடுப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் அவர் அந்த இலஞ்சத்தை பெற்றுக்கொள்ளாமல் கடமையை சரிவர செய்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழிவகுத்தார்.
எனக்கு தெரிந்த காலந்தொட்டு பொலிஸார் இலஞ்சம் வாங்குவது என்பது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன கதை. என்னதான் இலஞ்சம் மற்றும் ஊழல்களை ஒழிப்பதாக அநுர கூறிக்கொண்டு ஆட்சிபீடம் ஏறினாலும் “திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ” என பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது போல் இலஞ்சம் வாங்குபவன் தானாக திருந்தாவிட்டால் இலஞ்சத்தை ஒழிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும்.
சரி இலஞ்சம் வாங்குவதைத்தான் உங்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை ஆனால் இலஞ்சம் பெற மறுத்து கடமையை சரியாக செய்கின்றவரை பாராட்டி ஒரு கௌரவம் வழங்கினால் உங்களது பொலிஸ் திணைக்களமோ, அல்லது அரங்சாங்கமோ எந்தப் பக்கத்தினால் குறைந்துபோகும்? அதுசரி, நீங்கள் எப்படி கௌரவிப்பீர்கள், இலஞ்சம் வாங்க மறுத்தது ஒரு தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் தானே. சிங்களப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்த காரியத்தை செய்திருந்தால் நீங்கள் இப்போது தலையில் தூக்கிவைத்து ஆடியிருப்பீர்களோ என்னவோ…
இப்படி நேர்த்தியாக கடமைகளை செய்கின்றவர்களை கௌரவப்படுத்துங்கள், அது உங்கள் ஆட்சி மீதும், பொலிஸ் திணைக்களம் மீதும் நன்மதிப்பை ஏற்படுத்தும். எமது ஆட்சியில் இனவாதம் இல்லை இல்லை என்று வாயால் கூறிக்கொண்டு இருக்காமல் செயலால் செய்து காட்டுங்கள். சிலவேளை நீங்கள் செய்கின்ற ஒரேயொரு கௌரவிப்பால் இலஞ்சம் பெறுகின்ற பத்து அல்லது நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் திருத்துவதற்கு ஒரு வாய்ப்பாககூட இருக்கும்.
28ஆம் திகதி இலங்கையின் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய யாழ்ப்பாணம் வரவுள்ளதாக அறியமுடிகிறது. அவர் வந்தாவது ஏதாவது இதண்டுகின்றாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

