வவுனியா குட்செட் வீதியில் மஸ்தான் ரேடர்ஸ் செய்யும் அலங்கோலம் இதோ (Photos)
மஸ்தான் ரேடர்ஸிற்கு சொந்தமான வாகனமொன்றினால் வவுனியா குட்செட் வீதி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குட்செட் வீதியில் அமைந்துள்ள மஸ்தான் ரேடர்ஸிற் சொந்தமான பெற்றோல் சேமிப்பு நிலையத்திற்கு தினமும் எரிபொருள் கொண்டு கனரக வாகனங்கள் செல்கிறது. இவ் வாகனங்கள் குட்செட் வீதியில் அமைந்துள்ள ஒர் முச்சந்திக்கு சென்று வாகனங்களை திருப்பி செல்கின்றன. இதன் காரணமாக குறித்த காபெற் இடப்பட்ட வீதி சேதமடைந்துள்ளது. எரிபொருள் தாங்கிய கனரக வாகனத்தின் சில்லு திரும்பும் சமயத்தில் வீதியினை சேதமடைய வைப்பதாகவும் இது தொடர்பாக பல தடவைகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரிடமும் நகரசபையிடமும் தெரியப்படுத்திய போதிலும் இது வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர். (2019.07.11)அன்று அவ்வீதியுடாக வாகனம் திரும்ப முற்பட்ட சமயத்தில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து வேறோரு மாற்றுப்பாதையுடாக குறித்த எரிபொருள் தாங்கிய வாகனம் திரும்பிச்சென்றது. இதனால் வீதியில் போக்குவரத்து பாதிப்படைந்திருந்ததுடன் எதிர்வரும் சில நாட்களில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

