யாழ் ஆனைப்பந்தியில் ஹரி ஹோட்டலுக்கு சீல்! செயலாளருக்கு அழுகிய இறைச்சியில் கொத்துறொட்டி!!
யாழ் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள ஹரி ஹோட்டல் இன்று சீல் வைக்கப்பட்டது. நேற்றிரவு யாழில் உள்ள பிரதேசசபை ஒன்றின் செயலாளர் அந்த கடையில் இறைச்சிக் கொத்து வாங்கியுள்ளார். அந்தக் கொத்துறொட்டியில் இருந்த இறைச்சி மிகவும் பழுதடைந்துள்ளது. இது தொடர்பாக கடையில் பொறுப்பாக நின்றவரிடம் கூறிய போது குறித்த நபர் செயலாளரை்அச்சுறுத்தியதுடன் ”நீ எங்கு சென்றாலும் எங்களை ஒன்றும் புடுங்க முடியாது” என சண்டித்தனத்தோடு கதைத்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் கடையினை சோதனையிட்ட போது , பழுதடைந்த குளிர் சாதன பெட்டியினுள் சமைத்த , சமைக்காத கோழி இறைச்சி , மாட்டு இறைச்சி , ஆட்டு இறைச்சி என 45 கிலோ இறைச்சி மீட்கப்பட்டதுடன் , உணவகத்தின் பல சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதையும் அவதானித்துள்ளனர்.
அதனை அடுத்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த உணவகத்திற்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை அடுத்து , உணவகத்தினை உடனடியாக மூடி சீல் வைக்குமாறும் , மீட்கப்பட்ட 45 கிலோ இறைச்சியை அழிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான் வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஆரோக்கியத்துடன் விளையாட்டு நடாத்தும் இவ்வாறான ஹோட்டல்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.


