மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காக தனது தாயின் 8½ பவுன் தாலிக்கொடியைத் திருடி, அதனை அடகு வைத்து 14 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொடுத்த 22 வயதுடைய யுவதியை இன்று (23) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த யுவதி தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருவதுடன், தாலிக்கொடி திருட்டுச் சம்பவம் தொடர்பில் உறவினரான பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தி, அவரைக் கைது செய்யச் செய்வதற்கும் முயன்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதி
கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி வீட்டிலிருந்த தாலிக்கொடி திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, வீட்டிற்கு அடிக்கடி வந்த உறவினரான பெண் ஒருவர் மீது சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் , பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
திருடப்பட்ட தாலிக்கொடி மீட்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், வீட்டின் உரிமையாளரின் மகளான குறித்த யுவதி, தாலிக்கொடியைத் திருடி ஜூன் 30ஆம் திகதி தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி தனியார் வங்கியொன்றில் 14 இலட்சம் ரூபாவிற்கு அடகு வைத்துள்ளமை கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட யுவதி, விசாரணையின்போது தாலிக்கொடியை அடகு வைத்து பெற்ற பணத்தை அன்றைய தினம் காந்தி பூங்காவில் வைத்து காதலனிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட யுவதியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.





