Home புதினங்களின் சங்கமம் தென்னிலங்கை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு!

தென்னிலங்கை தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு!

கொழும்பு, கடுவெல நகரில் அமைந்துள்ள மின்சாதன விற்பனை நிலையமொன்றில் இன்று (19) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களின் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடுவெல நகரிலுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் இயங்கி வந்த மின்சாதன விற்பனை நிலையத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கீழ் தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மேல் மாடிக்கும் பரவியதில், அங்கு உறங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் தீயில் சிக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 35 வயதுடைய தந்தை, 30 வயதுடைய தாய் மற்றும் அவர்களின் 2 வயது மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மாலபே, தலஹேன பகுதியைச் சேர்ந்த இவர்கள், சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே குறித்த கட்டிடத்தின் மேல் மாடியில் குடியேறியுள்ளனர். உயிரிழந்த தந்தை குறித்த மின்சாதன விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினரின் மூன்று வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கடுவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments