பிரான்சில் ஈழத்தமிழ்ப்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. 93 வது பிராந்தியத்தில் உள்ள லா கூர்னோவ் பகுதியில் அமைந்துள்ள கார் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர்களான நிலையத்தின் உரிமையாளர், அவரின் மனைவி மற்றும் திருத்துமிடத்தில் இருந்த மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
சம்பவத்தில் வால்டுவாஸ் பகுதியில் வசிக்கும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 51 வயதான மகேந்திர தேவி என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் காணாமல் போயிருந்த நிலையில் ஆறு நாட்களின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பணப்பரிமாற்றம் அல்லது வியாபார ரீதியான தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி முதல் மகேந்திர தேவி காணாமல் போயிருந்தார். அவரின் பிள்ளைகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்றன. அதற்கமைய கடந்த சனிக்கிழமை மாலை குறித்த திருத்த நிலையத்திற்குள் நுழைந்த பொலிசார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாடிக்கையாளர் ஒருவரின் காரின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் சடலம் மீட்டப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் ஆகிய மூவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் மீது கொலை குற்றச்சாட்டும், அவரது மனைவி மீது உடந்தையாக இருந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை புதிய காரொன்றை வாங்குவதற்காக குறித்த திருத்த நிலையத்திற்குச் சென்ற பெண்ணுக்கும், திருத்த நிலைய உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும், இதன் போது ஏற்பட்ட மோதல் காரணமாக குறித்த பெண் நிலைத்தடுமாறி விழுந்த நிலையில் உயிரிழந்ததாக கைது செய்யப்பட்ட மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் சென்ட் டெனிஸ் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
https://actu.orange.fr/societe/fait-divers/seine-saint-denis-un-corps-de-femme-retrouve-dans-le-coffre-d-une-voiture-le-garagiste-place-en-garde-a-vue-6medias-CNT000002tJBbS.html




