அநுராதபுரம் புனித பூமியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சத்தியாகிரகப் போராட்டம், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சித் திருப்பத்தை சந்தித்துள்ளது.
அங்கு பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருப்பது மருத்துவ பரிசோதனைகளில் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரம் ருவன்வெலி மஹாசேய விகாரைக்கு அருகில், புனித நகர திட்டமிடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட இந்தச் சத்தியாகிரகப் போராட்டத்தை அகற்ற காவல்துறையினர் முயன்றபோது அங்கு பெரும் மோதல் வெடித்தது.
காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரே இவ்வாறு போதைப்பொருள் பாவித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
‘தஹம் பிரசாத்’ என்றழைக்கப்படும் பலதுர ரங்கிரியலாகே பிரசாத் சுசந்த ஜயசிறி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, போதைப்பொருள் பாவித்தது உறுதி செய்யப்பட்டுள்ள நபராவார்.
புனித பூமியில் இடம்பெற்ற போராட்டக்களத்தில் போதைப்பொருள் பாவித்த ஒருவர் தேரருடன் தங்கியிருந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





