புதினங்களின் சங்கமம்

குடும்பப் பிரச்சனையில் கைதான அரச ஊழியர் பாக்கியராசா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் பலி! நடந்தது என்ன?

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் உள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படும் சிறைக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

119 இலக்க முறைப்பாட்டிற்கமைய குடும்பப் பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார்.

குறித்த உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் குடும்பஸ்தர் அணிந்திருந்த சாரம் துண்டினை பயன்படுத்தி தூக்கிலிட்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் குறிப்பிட்டுள்ளனர்.

அதே வேளை 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளின் தந்தையான உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவினர்கள் சிலர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தூக்கில் அவர் தொங்கி உயிரிழக்க வில்லை எனவும் உயிரிழந்தவரின் உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும் எனவே நீதி வேண்டும் என கோஷம் எழுப்பி இருந்தனர்.

மேலும் மரணமடைந்த குடும்பஸ்தர் கடந்த 2 நாட்களுக்கு முன்னரும் குடும்ப பிரச்சினைக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் அதே பிரச்சினைக்காக மீண்டும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில வைத்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியைச் சேர்ந்த சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.இவர் முன்னாள் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் என் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கு அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ண காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் தற்போது பல்வேறு மட்டங்களில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x