புதினங்களின் சங்கமம்

தற்போதய மீன்பிடி அமைச்சர் பச்சைப் பொய்யனா? பூநகரியில் நடப்பது என்ன?

பூநகரி முழங்காவிலில் நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோத காணி கட்டுமானங்களை தடுக்க சென்ற பிரதேசசபையின் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்களிற்கும் கட்சிக்கும் தொடர்பில்லையென அமைச்சர் சந்திரசேகர்; தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களது கேள்விக்கு பதிலளிக்கையில் முழங்காவில் தாக்குதல் முயற்சிகளிற்கு தலைமை தாங்கிய நபர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பூநகரி பிரதேசசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டவரென தெரியவருகின்றதேயென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர் தமது கட்சியை சேர்ந்த எவரும் அச்சம்பவத்துடன் பங்கெடுத்திருக்கவில்லையென தெரிவித்துள்ளார்.அவ்வாறு எவரும் அடையாளங்காணப்பட்டால் அவர் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குட்படுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் கரியாலைநாகபடுவான் வட்டாரத்தில் போட்டியிட்டு படுதோல்வியடைந்த மேகலாதன் சபேஸ்கரன் என்ற நபரே தாக்குதல் நடவடிக்கைக்கு தலைமை தாங்கியிருந்ததாக ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்நபர் சபேசன் என கிராமத்தில் அளைக்கப்படுபவரெனவும் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் அனுமதியற்ற கல் அரிவு ஆலை அரச காணிகளை ஆக்கிரமிப்பவரென முழங்காவில் நாச்சிக்குடாவில் கொடி கட்டி பறப்பவரெனவும் தெரியவந்துள்ளது.

தேர்தலில் படுதோல்வியடைந்த போதிலும் பின்கதவு வழியாக அந்நபர் நியமிக்கப்பட்டுள்ளவரை அமைச்சர் காப்பாற்ற முற்பட்டமை ஆதரவாளர்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.அவருடன் பூநகரி ஜெயபுரம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நபரொருவரும் இணைந்திருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஆளும் தரப்பின் ஆசீர்வாதத்துடன் அரச காணிகளை பிடித்துக்கொள்ள முன்னெடுக்கப்பட்ட சதி திட்டத்திற்கு எதிராக பூநகரி பிரதேசசெயலர் வழக்கினை இன்று தாக்கல் செய்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முழங்காவில் நாச்சிக்குடா முதல் கரியாலைநாகபடுவான் வரையென அரச காணிகளை 55துண்டுகளாக்கி தனது ஆதரவாளர்களிற்கு கடைகள் அமைக்க பகிர்ந்து வழங்கும் திட்டம் வகுப்பட்டிருந்தது.எனினும் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டபின்னராக அதனை சந்திரசேகரன் -இளங்குமரன் அணி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.அத்திட்டத்தை முன்னெடுக்கும் முகவராக தாக்குதல் சூத்திரதாரி சபேஸ்கரன் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இத்திட்டத்தை வகுத்துக்கொடுத்தவர்களான பூநகரி பிரதேசசெயலக குடியேற்ற உத்தியோகத்தர் மற்றும் காணி உத்தியோகத்தர்கள் செயற்பட்டுவருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையிலேயே கரவெட்டி பிரதேசசெயலகத்திலிருந்து இடமாற்றத்தில் குடியேற்ற உத்தியோகத்தர் சென்றிருந்ததாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.