தனது ஆதரவாளர்கள் , அங்கத்தவர்கள் ஏதாவது இசகு பிசகான வேலை செய்து முறையாக மாட்டுப்பட்டால் எந்த ஒரு அரசியல்வாதியும் அவர்களுக்கு துணை நிற்கமாட்டார்கள் என்பது உலகறிந்த விடயம். அதற்கு அங்கஜனும் விதிவிலக்கு அல்ல….. எனவே காவாலிகளும், காமுகர்களும் அரசியல் செல்வாக்கு இருக்கின்றது என நினைத்து அட்டகாசம் செய்யாதீர்கள்…. பிறகு அலங்கோலப்பட்டுவிடுவீர்கள்…. இதுதான் உண்மை…. இதோ யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பேஸ்புக்கில் விட்ட பதிவை அப்படியே தந்துள்ளோம்….
தெளிவுபடுத்தலுக்காக..!
அண்மையில் சிறுமியொருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கும், எனக்கும், எமது கட்சிக்கும், மற்றும் கட்சியின் பிரதேச அலுவலகங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
கடந்த தேர்தல் காலத்தின் பரப்புரைகளின்போது, புதிய தொழில் நிறுவனத்தை ஆரம்பித்து வளர்ந்துவரும் தொழில் முயற்சியாளராக தன்னை அடையாளப்படுத்திய குறித்த இளைஞர், தனது நிறுவனத்தை பார்வையிட வருகைதருமாறு வைத்த கோரிக்கைக்கு அமைவாக அங்கு நாம் சென்றிருந்தோம். அச்சந்தர்பத்துக்கு முன்பும், பின்பும் அவருடன் எவ்வித நட்பும், தொடர்புகளும் எமக்கு இருக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஒரு மக்கள் பிரதிநிதியாக நான் சந்திக்கும் ஒவ்வொரு தனி நபர்களையும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு தனி நபர்களையும், அவர்களது தனிப்பட்ட நடத்தைகளோடு எம்மை சேர்த்து விமர்சிப்பதானது நாகரீகமற்ற அரசியல் சுயலாபமாகவே கருதுகின்றேன்.
இத்தகைய கீழ்த்தரமான சுயலாப அரசியலில் ஈடுபடுபவர்களே..!
உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். குறித்த நபரின் வாடிக்கையாளராக தமது இல்லத்து நிகழ்வுகளை படம்பிடித்துக்கொண்ட அனைவரையும் அவருக்கு உடந்தையானவர்கள் என கருதுவீர்களா?
சமூகத்தின் விழுமியங்களுக்கும், சட்டத்துக்கும் விரோதமான குற்றங்களை செய்த அனைத்து குற்றவாளிகளையும் சட்டம் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்.
குறித்த குற்றச்செயல் தொடர்பில் நீதிமன்ற விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில், வீண் வதந்திகளையும், அரசியல் நோக்கம் கொண்ட வன்மங்களையும் வெளிப்படுத்தாமல் சமூக பொறுப்புள்ளவர்களாக நாம் எல்லோரும் செயற்பட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி அங்கஜன் இராமநாதனின் பேஸ்புக் பதிவு






