Home புதினங்களின் சங்கமம் மட்டக்களப்பில் தொடரும் கொரோனா ஆதிக்கம்: ஒரே வாரத்தில் 175 பேருக்கு தொற்றுறுதி!

மட்டக்களப்பில் தொடரும் கொரோனா ஆதிக்கம்: ஒரே வாரத்தில் 175 பேருக்கு தொற்றுறுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலத்தில் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் மூன்று மரணங்களும் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் 15 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிரிவினை சேர்ந்த 06 பேரும், ஆரையம்பதி மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்தி அதிகாரி பிரிவுகளில் தலா இருவருமாக 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒன்றும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இரண்டுமாக மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1,426 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 19 கொரோனா மரணங்களும் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 171 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். கடந்த மாதம் 165பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். கடந்த வருடத்தில் 200 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.