மட்டக்களப்பு, புதிய காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய தங்க நகைக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில், வீட்டு உரிமையாளரின் உறவினர் உட்பட மூன்று சந்தேக நபர்களைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஏ. தர்சினி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணி:
கடந்த 5ஆம் திகதி புதிய காத்தான்குடிப் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஆடை மாட்டும் ஸ்டாண்டில் (Stand) தொங்கவிடப்பட்டிருந்த பையொன்றிலிருந்து நான்கரை பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றிருந்தனர். திருடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 16 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணையும் கைதும்:
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம். நந்தனவின் வழிகாட்டலில், பதில் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனடிப்படையில் 17, 17 மற்றும் 56 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவர் குறித்த வீட்டு உரிமையாளரின் உறவினர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நகைகள் மற்றும் பணம் மீட்பு:
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொள்ளையிடப்பட்ட நகைகளின் ஒரு பகுதி கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையொன்றில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. அதன்படி, குறித்த நகைக்கடையிலிருந்து 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூவரில் இருவரிடமிருந்து 6 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும், மூன்றாவது சந்தேக நபர் தனக்குப் பங்காகக் கிடைத்த பணத்தை முழுமையாகச் செலவு செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.





