யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுமியும் அதே வயதுடைய சிறுவனும் காதலித்து வீட்டை விட்டுத் தப்பியோடிய போது, கோப்பாய்ப் பகுதியில் வைத்துச் சிறுமியின் உறவினர்களால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த மாணவர்களான சிறுவனும் சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுவனின் பெற்றோருக்கு அவன் கற்று வந்த கல்வி நிலையத்தால் இத்தகவல் தெரிவிக்கப்பட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த சிறுவனை அவனது பெற்றோர் அக்கல்வி நிலையத்திற்கு அனுப்பாது நிறுத்தி வைத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், தனது சித்தியின் தொலைபேசி ஊடாகச் சிறுவன் அந்த மாணவியை பல தடவைகள் தொடர்பு கொண்டு வந்துள்ளான். இதன் தொடர்ச்சியாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிறுமியின் பெற்றோர் கோவிலுக்குச் சென்ற போது, அம்மம்மாவுடன் தனித்திருந்த சிறுமியைத் தனது சித்தியின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சிறுவன் ஓடித் தப்பியுள்ளான்.
பெரிய பிரயாணப் பையுடன் சிறுவன் ஒருவனின் மோட்டார் சைக்கிளில் தனது பேரப்பிள்ளை ஏறிச் செல்வதை அவதானித்த சிறுமியின் அம்மம்மா, அங்கிருந்து கூக்குரலிட்டுக் கத்தியுள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள் மோட்டார் சைக்கிளைத் துரத்தத் தொடங்கியுள்ளனர்.
துரத்திச் சென்ற வேளையில், கோப்பாய் சந்திப் பகுதியில் உள்ள சமிக்ஞை விளக்கில் (Signal) நிற்காது சிறுவன் சென்ற போது மயிரிழையில் விபத்து ஏற்படாமல் தப்பி, கைதடிப் பக்கமாக ஓடத் தொடங்கியுள்ளனர். அதன் பின்னர் கோப்பாய்ப் பாலத்திற்கு அருகில் இருவரும் வழிமறிக்கப்பட்டனர்.
சிறுமியின் உறவினர்களால் சிறுவன் தாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் சிறுவனும் சிறுமியும் ‘ஹயஸ்’ (Hiace) வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டு, உரும்பிராயில் உள்ள சிறுமியின் உறவினர் வீட்டில் சிறுவன் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில், தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் அங்கு மோதல் நிலை தோன்றியுள்ளது. இதன் பின்னர், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்திச் சிறுவனை அங்கிருந்து அவனது பெற்றோர் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது.
அத்துடன் சிறுவனின் பொக்கற்றில் இருந்து 40 ஆயிரம் ரூபா பணமும் தாயாரின் சில நகைகளும் மீட்கப்பட்டதாகவும் அவற்றையும் சிறுவனின் உறவுகளிடம் திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கொடிகாமம் பகுதியில் உள்ள சிறுவனின் தந்தையின் சிறியதாய் வீட்டுக்கு செல்ல இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த மூதாட்டி மாற்றத் திறனாளி எனவும் தெரியவருகின்றது.
சிறுவனின் பெற்றோர் அரச ஊழியர்கள் எனவும் சிறுமியின் தந்தை வர்த்தகர் எனவும் தெரியவருகின்றது. இதே வேளை சிறுவன் யாழ் நகரப்பகுதி ஒன்றில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் எனவும் சிறுமி வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை மாணவி எனவும் தெரியவருகின்றது.
13 வயதுச் சிறுமி மற்றும் சிறுவனின் துணிச்சலான இச் செய்கை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





