Home புதினங்களின் சங்கமம் கனடாவிலிருந்து குகதீஸ்வரன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டானா? நடந்தது என்ன?

கனடாவிலிருந்து குகதீஸ்வரன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டானா? நடந்தது என்ன?

தமிழருக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்கிய கனேடிய நீதிமன்றம்

கனடாவில் குடியேற்ற விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, நாடு கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை தமிழர் ஒருவரின் வழக்கு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.

கனடாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த குகதீஸ்வரன் துரைசிங்கம் என்பவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இவர் 2010ஆம் ஆண்டு இலங்கை தமிழர்கள் 492 பேருடன் எம்.வி. சன் சீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்தவர்.

அவரது அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பம் 2012ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் பல்வேறு சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

இந்நிலையில், 2026 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த அவருக்கு கனடாவின் கூட்டாட்சி நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை வழங்கியது.

இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டால் அவர் சித்திரவதைக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என நீதிபதி செபாஸ்டியன் கிராமோண்ட் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

சன் சீ கப்பலில் பயணித்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இருவரின் நிலைமைகள் நீதிமன்றத்தின் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அவர்களில் ஒருவர் சித்திர வதைக்கு உள்ளாகிய பின்னர் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காணாமல் போனதாகவும் அறிக்கைகள் சுட்டி காட்டின.

கனடாவில் அதிகரிக்கும் நாடு கடத்தல்கள்

கனடாவின் எல்லை பாதுகாப்பு முகமையின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களின்படி, 2025ஆம் ஆண்டில் 23,160 பேர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17,397 ஆக இருந்தது.

2025ஆம் ஆண்டுக்கான எண்ணிக்கை இது வரை பதிவான மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

மேலும், 2027 முதல் 2029 வரையான குடியேற்ற திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3,80,000 நிரந்தர குடியுரிமை அனுமதிகளும், 3,70,000 புதிய தற்காலிக குடியிருப்பாளர் வருகைகளும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் குடியேற்ற கொள்கைகள் கடுமையடைந்து வரும் நிலையில், அகதி விண்ணப்பங்கள், நாடு கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் திருப்பி அனுப்பப்படுபவர்களின் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments