Home புதினங்களின் சங்கமம் யாழில் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்து வங்கி அதிகாரி திருச்செந்தூரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!

யாழில் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்து வங்கி அதிகாரி திருச்செந்தூரன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம், சங்கானை மற்றும் மல்லாகம் பகுதிகளை வதிவிடமாகக் கொண்ட முன்னணி வங்கி அதிகாரி ஒருவர், பல கோடி ரூபாய் நிதியை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பியோடியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குலேந்திரன் திருச்செந்தூரன் எனப்படும் இந்த நபர், Mercantile Investment PLC மற்றும் Cargills Bank ஆகிய பிரபல நிதி நிறுவனங்களில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர் ஆவார்.

தனது வங்கிப் பதவியையும், மக்கள் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இவர், பல நபர்களிடமிருந்து வைப்புத் தொகைகளாகவும் கடன்களாகவும் ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவரது தந்தை ராஜரட்ணம் குலேந்திரன் (தனியார் வங்கியொன்றின் முன்னாள் பிராந்திய மேலாளர்), மாமனார் நாகதீபன் நாகேஸ்வரன் (அரச வங்கியொன்றின் முன்னாள் பிராந்திய மேலாளர்) மற்றும் மனைவி கீர்த்திகா திருச்செந்தூரன்(தனியார் வங்கியொன்றின் ஊழியர்) ஆகியோரும் நிதித் துறையில் பணியாற்றிய அனுபவம் உடையவர்கள் என்பதால், பொதுமக்கள் இவரைப் பெரிதும் நம்பிப் பணத்தைக் கொடுத்துள்ளனர்.

குலேந்திரன் திருச்செந்தூரன் யாழ்ப்பாணத்தில் உள்ள கார்கில்ஸ் வங்கியின் கிளையில் பணிபுரிந்தபோது, ​​காலமான வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தன் காரணமாக அவர் வங்கியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தத் தகவல் தற்போது அவரது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் திருச்செந்தூரனின் குடும்பத்தினருடன் உரையாடியதில் இருந்து, அவர்களின் வங்கி அறிவைப் பயன்படுத்தி, சட்டரீதியிலான சிக்கல்களில் இருந்து அவரைக் காப்பாற்ற மொத்த குடும்பமுமே திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளதாக உறுதியாகிறது.

செப்டம்பர் 21: திருச்செந்தூரன் காணாமல் போயுள்ளதாகக் கூறி அவரது குடும்பத்தினரால் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. செப்டம்பர் 22: அவர் பணியாற்றிய Mercantile Investment PLC நிறுவனத்திற்குச் சென்ற அவரது தந்தையார், அங்கிருந்து திருச்செந்தூரனின் கடவுச்சீட்டை (Passport) எடுத்துச் சென்றுள்ளார் என்பதை நிறுவன ஊழியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட அன்றைய தினமே, திருச்செந்தூரன் இந்தியா வழியாக சிங்கப்பூர் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது அவர் வெளிநாடுகளில் உள்ள தனது நட்பு வட்டாரங்களிடமிருந்தும் பல லட்சங்களை கடனாகப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

பணத்தை இழந்து தவிக்கும் பொதுமக்கள், இது தொடர்பாகப் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தீவிர விசாரணை நடத்தி, தமக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments