பாலியல் தொல்லை வழங்கியதாகப் பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தவிசாளர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு எதிர்வரும் 17.11.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தவிசாளரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண்ணொருவர், தவிசாளர் தனக்குப் பாலியல் தொல்லை வழங்கியதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தவிசாளர், 16.10.2026 அன்று பொலிஸாரால் அழைத்துசெ செல்லப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்
அன்றைய தினமே, இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 345ஆம் பிரிவின் கீழ், வார்த்தைகள் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றப் பதில் நீதிபதி ரி. கெங்காதரன் முன்னிலையில் தவிசாளர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தவிசாளர் தரப்பு சட்டத்தரணியின் வாதங்களைக் கேட்ட பதில் நீதிபதி, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையாளர்களின் பிணையில் தவிசாளரை விடுவிக்க உத்தரவிட்டார். வழக்கு 17.11.2026ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகன்றன.





