வவுனியாவில் தனது நண்பனின் 11 வயது மகளை கடுமையாக துஸ்பிரயோகம் செய்த நபருக்கு 40 வருட கடூழிய சிறை!!
நண்பனின் 11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.
கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின் பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயதுடைய பெண் பிள்ளையை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய 36 வயது நிரம்பிய நபருக்கு எதிராக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்கு விசாரணைகளின் தொடர்ச்சியாக குறித்த எதிரிக்கு எதிராக 2025 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்ற பகர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தது. எதிரி தலைமறைவாகிய நிலையில் எதிரிக்கு எதிராக எதிரி இன்றிய விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டது. எதிரிக்கு எதிராக அரச சட்டவாதியினால் நெறிப்படுத்தப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தொடுனர் தரப்பு குறித்த குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துள்ளதாக தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ ஆனந்தராஜா அவர்கள், குறித்த எதிரிக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்பளித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா 2 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அத்துடன் 2 இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அரச சட்டவாதி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ நெறிப்படுத்தியிருந்தார். வழக்கு நடவடிக்கையின் போது தலைமறைவாகியிருந்தமை, குறித்த சம்பவத்தினால் சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உள பாதிப்புகள், பெருகி வரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பனவே குறித்த எதிரிக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட காரணமாக அமைந்ததென வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள் தனது தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

