யாழ் நகர் கார்கில்ஸ் சதுக்கத்தி்ற்கு சென்ற உதயசீலன் டொக்டர் அவதானித்த கொடுமை என்ன? Photos
வைத்தியர் கற்கண்டு உதயசீலன் அவர்களின் பேஸ்புக் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்..
காலையில் யாழ் நகர மத்தியில் இருக்கும் கார்கில்ஸ் சென்றிருந்தேன். சதுக்கத்தின் முன்பாக இருக்கும் வாகன தரிப்பிடத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு பாதுகாப்பு ஊழியர் நின்று கொண்டு இருக்கிறார். வயது மூத்தவர் 60-65 இருக்கலாம்.
ஒரு தற்காலிக நிழல் குடை கூட இல்லை. அருகே இருக்கும் மின்கம்பத்தின் ஒற்றைக் கோடு நிழலை அண்டியதாக நிற்க முயல்கிறார். நண்பகல் ஆனால் அந்த நிழலும் அற்று போகும் வெயிலில் காய்ந்து வியர்வையில் குளித்தபடி இருக்கிறார். அருகே நான்கைந்து தண்ணீர் போத்தல்கள் அவையும் கடும் வெயிலிலே இருக்கிறது. சதுக்கத்தின் உள்ளே இளம் வயது பாதுகாப்பு ஊழியர்கள் பலர் நிற்கின்றனர்.
கடுமையான வெயில் சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை. ஆனால் காலை தொடக்கம் மாலை வரை ஒரு வயது முதிர்ந்தவர் எவ்வாறு நிற்க முடியும். என்னதான் கடமை என்றாலும் அதற்கு சில ஞாயங்கள் வேண்டும் தானே!
யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. இருந்த போதும் கார்கில்ஸ் விற்பனை பகுதி மேலாளாரிடம் வேண்டு கோளை விடுத்திருக்கிறேன்.
1. தற்காலிக நிழல் குடை ஏதேனும் ஏற்படுத்தி கொடுக்கலாம்.
2. கடமையில் உள்ளவர்களை மணிக்கொருமுறை சுழற்சி முறையில் வெளிப்புற கடமைக்கு நிறுத்தலாம்.
உரிய தரப்பினை தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால், தயவுகூர்ந்து இத்தகவலை தெரிவியுங்கள்.
குறிப்பு; வயது முதிர்ந்தவர் என்பதற்காக மட்டும் இந்த பதிவு இடப்படவில்ல. இந்த இடத்தில் எந்த வயதுடையவர் இருந்தாலும் அவர்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். எவர் இந்த வயதில் நின்றாலும் பாதிப்படைவர்.
அனேக திணைக்களங்களில் நிறுவனங்களில் வயது முதிர்ந்தவர்களை பாதுகாப்பு ஊழியர்களாக பார்த்துள்ளேன். அவர்கள் தமது குடும்ப நிலை காரணமாகவும் தாம் யாருடைய தயவிலும் இருக்காமல் தன்மானமாக உழைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவ் வேலைக்கு வருகிறார்கள்.