புதினங்களின் சங்கமம்

‘கோத்தா ஒப்பீசில் இருந்து கதைக்கிறேன்!! வடிவேலு பாணியில் யாழ் பெரியாஸ்பத்திரி பணிப்பாளரை மிரட்டியவருக்கு நடந்த கதி!!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜாவை
தொலைபேசியில் மிரட்டிய நீர்கொழும்பு வாசியை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மருத்துவமனை பதில் பணிப்பாளரை
தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர், ஜனாதிபதி செயலக அதிகாரி என தன்னை
அறிமுகப்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை
நடத்துவதற்கான ஒப்பந்தத்தை தாம் முன்மொழிபவருக்கே வழங்க வேண்டும் என்று இதன்போது
மிரட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பதில் பணிப்பாளரால் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார், தொலைபேசி
பகுப்பாய்வின் மூலம், சந்தேகபரின் இருப்பிடத்தை உறுதி செய்தனர்.

அந்த நபர் நீர்கொழும்பை சேர்ந்தவர்.

அவரைக் கைது செய்வதற்கான விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த
யாழ்ப்பாணம் பொலிஸார், பிடியாணை உத்தரவை பெற்றனர்.

சந்தேக நபரின் இடத்துக்குச் சென்ற யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் குழுவினர் சந்தேக நபரைக்
கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்
முற்படுத்தப்பட்டார். தற்போது நாட்டில் நிலவும் கோவிட்-19 பரவல் காரணமாக சந்தேக நபரை
நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து வழக்குஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சிற்றுண்டிச் சாலையை நடத்துவதற்காக கிடைக்கப் பெற்ற
மூன்று விண்ணப்பங்களும் நிர்வாகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே பதில்
பணிப்பாளருக்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது