விருந்தினர் விடுதி ஒன்று அமைப்பதற்காக மக்களின் காணி சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் பொலிஸாரை வரவழைத்துள்ளமையால் மண்டைதீவில் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
முன்னதாக ஒன்று திரண்ட மக்கள் வெளியிட்ட எதிர்ப்பு நிலையை அடுத்து அங்கு சென்றிருந்த நில அளவைத் திணைக்களத்தினர் அங்கிருந்து திரும்பிச் சென்றிருந்தனர்.
சிறிது நேரத்தில் யாழ்ப்பாணத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகளும் பொலிஸாரும் மண்டைதீவுக்கு வந்திருந்த நிலையில் சிறிது நேரத்தில் முன்னர் திரும்பிச் சென்றிருந்த நில அளவைத் திணைக்களத்தினர் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.
இதனை அடுத்து அந்தப் பகுதி மக்களும் அரசியல் பிரமுகர்களும் வீதியில் அமர்ந்து எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றனர்.
மண்டைதீவில் குடிநீருக்கு நெருக்கடி நிலை காணப்பட்டுவரும் சூழலில், நில அளவை செய்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலம் விவசாயச் செய்கைக்கு ஏற்ற நல்ல நிலம் என்றும் நல்ல குடிநீர் உள்ள பகுதி என்றும் தெரிவித்து மக்கள் தமது நிலத்தை அபகரிக்கவேண்டாம் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, பொலிஸார் அங்கு பிரச்சனமாகியுள்ள நிலையில் கட்டாயமாக மக்கள் வெளியேற்றப்பட்டு நிலம் அளவீடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்தப் பகுதி பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.





