கொரோனாவால் புத்துயிர்ப்புப் பெறும் தமிழர் பண்பாட்டு அம்சங்கள்!

குனிந்து நிலத்தை கூட்டும் விளக்கமாற்றினால் பெருக்கப்பட்ட முற்றம் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட அரைவட்டக் கோலங்கள் வரையப்பட்டு ஒருவித அழகைக் காட்டுகின்றன.

விளக்குமாற்றால் நில ஓவியமாகமாறிவிட்ட அரைவட்டங்களின் மேல் தெளிக்கப்பட்ட சாணிகரைத்த நீர்த்திவளைகள் அங்குமிங்கும் பொட்டுப்பொட்டாகக் காட்ச தரும். உதிர்த்துவரும் சூரியன் மெல்லமெல்லத் தன் செவ்வொளியை இழந்து இளம் வெண்ணிறக் கதிர்களை வீச ஆரம்பிக்க முற்றத்து வேப்பமர இலைகளை சலசலக்க வைத்துக்கொண்டும் குளத்தடிவாழையைத் தொட்டுக்கொண்டும் வரும் மெல்லியகாற்று தென்றலாய் வந்துமேனியை வருடுகிறது.

வீட்டுவாசல் வெளித்தாவாரத்தில் திருநீற்றுக் குடுவை தொங்குகிறது. காலைக்கடன் முடித்துமுகம் கை கால் கழுவிவரும் எவரும் தீருநீற்றை எடுத்து ‘சிவசிவா’ என உச்சரித்து மூன்று முறைநெற்றியில் ஊன்றித் தேய்க்கத் தவறியதில்லை.

வாசற்படி தாண்டி உள்ளே போனால் சுவரில் ஒன்று அல்லது பலதோ சுவாமி படங்கள் காணப்படும். அதனருகே ஒரு தூண்டாமணி விளக்குத் தொங்கி எரிந்து ஒளிவீசிக்கொண்டிருக்கும். படத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள தணல் குவிக்கப்பட்ட தட்டிலிருந்து எழும் சாம்பிராணி புகையின் வாசணை அந்தவீட்டின் மூலைமுடக்கெங்கும் பரவி ஒரு திவ்வியமான சூழலை உருவாக்கியிருக்கும்.

கல்வீடென்றாலும் மண்வீடென்றாலும் தினமும் கூட்டித் துடைத்து மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டிருக்கும். மண்வீடெனில் ஒவ்வொரு வெள்ளியினில் சாணியும் முள்முருக்கமிலையும் சேர்ந்தகலவையால் மெழுகப்படும்.

இது நாம் எமது மண்ணில் பிராந்திய இல்லமொன்றில் காலை நேரத்தில் காணக்கூடிய பண்பாட்டுக் கோலக்காட்சிகள். நெருக்கடி நிறைந்த நகரப்புற வாழ்வில் காணப்பட முடியாத அமைதியும் அழகும், புனிதமும் நிறைந்த மனம் மகிழவைக்கும் சூழல் எம்மை ஒருதிவ்வியமான உலகுக்கே இட்டுச் சென்றுவிடும்.

இங்குதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய முக்கியமானவிடயமொன்று உண்டு. இங்கு திகழும் அழகுக்கும், மனநிறைவுக்கும் அப்பால் ஓரு மகத்துவம் உண்டு. அதுதான் சுத்தமான நிலம், சுத்தமானகாற்று, சுத்தமான சூரியஒளி, சுத்தமான தண்ணீர் என இயல்பாக எம்முடன் ஒன்றிவிட்ட தூய்மையிலிருந்து எமது உடல் தானாகவே நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் காரணமாக நோய்க்கிருமிகள் மனிதனிலிருந்து வெகுதொலைவிலேயே நின்றுவிடுகின்றன.

அதிகாலையில் வீடுமுற்றம் என்பன பெருக்கப்படும்போது குப்பைகள் கிருமிகள் உற்பத்தியாகக்கூடிய பழுதடைந்த பொருட்கள் தூசிகள் போன்றவை முற்றாகவே நாளாந்தம் அகற்றப்படுகின்றன. முற்றத்தில் தெளிக்கப்படும் சாணிக்கரைசல் வீட்டுக்குத் தெளிக்கப்படும் சாணி வீடுமெழுக பயன்படுத்தப்படும் சாணி, முள்முருக்கு என்பன தரமான கிருமிநாசினிகளாகும். திருநீறு, சாணியை வட்டில்களாகத் தட்டி எரித்தே உருவாக்கப்படுகின்றது. அதை நெற்றியில் பூசும் போது அது மண்டையில் உள்ள துர்நீரை உறுஞ்சி வெளியேற்றிவிடும். நெற்றியில் திருநீறு பூசியிருப்பவர்கள் நெற்றியில் தனியான செந்தழிப்பு நிலவுவதை அவதானிக்க முடியும்.

அதாவது நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள் நோய்க்கிருமிகள் உருவாகவும் தோற்றவும் முடியாத சூழலைப் பேணுவது என்பன இயல்பாகவே எமது பண்பாட்டு அம்சங்களில் காலம்காலமாக நிலவி வந்ததைக் காணமுடியும்.

வேகமான நகரமயமாதல் காரணமாக முதலாலித்துவ உற்பத்தி முறைமை காரணமாகவும் ஏற்பட்டுள்ள அசுர மனித உழைப்புத் தேவை எமது வாழ்வை இயந்திரமயமாக்கிவிட்டதாலும் எதிலும் ஆழமாக் காலூன்ற முடியாதளவுக்கு அவசரமயமாகிவிட்டதாலும் எமது பண்பாட்டுவிழுமியங்கள் வழக்கொழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முற்றத்து வேம்புக்கு பதிலாக குறோட்டன் செடிகளும் எல்சோராக்களும் அலங்கரிக்க பூவரசம் வேலிகளுக்கு பதிலாக சீமெந்து மதிற்சுவர்கள் எழுந்துநிற்க மண் முற்றங்களுக்கு பதிலாக செங்கள் ஓடுகள் பதிக்கப்பட்டிருக்க சுத்தமான நோய்க்கிருமிகளை விரட்டத்தக்க காற்றையும் சுத்தமான நிலத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

எனினும் உலகமயமாக்கல், நகரமயமாதல் என்பனவற்றின் அகோர மேலாதிக்கத்தின் மத்தியிலும் எமது பண்பாட்டு அம்சங்களில் சில மங்கி மறைந்துவிடாமல் நிலைத்து நின்று எம்மிடையே நோய்க்கிருமிகள் பரவுவதைத் தடுப்பதிலும் அசுத்தங்களிலிருந்து எம்மைப் பாதுகாப்பதிலும் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள துணைநிற்கின்றது.

நாமொரு மரணச்சடங்கிற்கு சென்றுவிட்டுவந்தால் தலையில் குளித்துவிட்டு எம்மை முழுமையாகச் சுத்தப்படுவதுடன் நாம் அணிந்துவந்த ஆடைகளையும் துவைத்து வெய்யிலில் உலரப்போடுகிறோம். மருத்ததுவமனைக்கு சென்று வந்தாலும் குளித்து எம்மைச் சுத்தப்படுத்தும் பழக்கம் எம்மிடையே உண்டு. கிராமிய மக்களிடையே பயணம் சென்று வந்தால் குளித்த பின்பே வீட்டுக்கு உள்ளே வரும் வழக்கம் நிலவி வருகிறது. கொரோனாவுக்கு பிறகே கை கழுவும் பழக்கம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் எமது பண்பாடு மரணவீட்டிலோ, மருத்துவமனையிலோ, பயணங்களின் போதோ ஏனையோரிடமிருந்து எம்மீது கிருமித்தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாகக் குளித்தல், உடுப்புகளைக் கழுவுதல் என்பனவற்றை பேணி வந்துள்ளது.

இப்போது தனிமைப்படுத்தல் நோய் பரவுதலை தடுக்கும் ஓர் வழிமுறையாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சின்னமுத்து கொப்புளிப்பான் குக்கல், கூவைக்கட்டு போன்ற தொற்றுநோய்கள் ஒருவரிற்கு ஏற்பட்டால் அவரைத் தனிமைப்படுத்தி வைப்பதும் அவர்கள் பாவிக்கும் பாத்திரங்கள் உடுப்புகள் படுக்கைள் என்பன அவர்களால் மட்டுமே பாவிக்கப்படுவதும் எம்மிடையே கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டாய நடைமுறைகளாகும். அவர்கள் குணமடைந்த பின்பு ஒன்றுவிட்டு ஒருநாளுக்கு தொடர்ந்து ஒன்பது தலைக்குளிப்புகள் மேற்கொள்ளப்பட்ட பின்பே மற்றவர்களுடன் நெருங்கிப் பழக அனுமதிக்கப்படுவார்கள். அதாவது தொற்றுநொய் பரவுவதை தடுக்க தனிமைப்படுத்தல் முறை எம்மால் காலம் காலமாக வேகையாளப்பட்டுவந்துள்ளது. மேலும் பிறருடன் கைகுலுக்குவது கட்டியணைத்து முத்தமிடுவது நிறுத்தப்படவேண்டுமென தற்சமயம் அறிவுறுத்தப்பட்டபோதிலும் எமது பண்பாட்டில் ஏற்கனவே அவை தவிர்க்கப்பட்டுள்ளன.

இன்றைய நகரமயமாதல் இயந்திரமயமாக்கப்பட்ட வாழ்வு என்பன காரணமாக எமது பண்பாட்டில் இயல்பாகவே பேணப்பட்டுவந்த சுத்தமும் புனிதமும் அதனால் நிலைபெற்றிருந்த நோய் உருவாகாமலும், பரவாமலும் தடுக்கும் பழக்கவழக்கங்கள் மெல்லமெல்ல மங்கி வருகின்றன. எதிர்காலத்தில் இவை வழக்கொழிந்து போய்விடுமா என்று அச்சம் நிலவிய நிலையில் கொரோனாத் தொற்று எமது பண்பாட்டின் மேன்மையையும் தேவையையும் உணரக்கூடிய ஓரு சூழலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே எமது பண்பாட்டுக்கே உரிய மேன்மையான தனித்துவமான புனிதமான பழக்கவழக்கங்களை நகரமயமாகலின் ஆபத்திலிருந்து பாதுகாத்து இன்றையகாலத்துக்கு ஏற்றவகையில் மெருகுபடுத்தி கூர்மைப்படுத்தி இயற்கையாகவே எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகளைப் பேணிப்பின்பற்றுவது அவசியமாகும்.

நா.யோகேந்திரநாதன்

error

Enjoy this blog? Please spread the word :)