பெண்களின் மாதவிடாயும் யாழ் மந்திகையில் வேலை செய்த சிவச்சந்திரன் டொக்டரும்!!
யாழ்ப்பாணம் மந்திகையில் Acting Consultant VOG ஆக தொழிற்பட்ட சிவச்சந்திரன் எனும் டொக்டர் தனது முகப்புத்தகத்தில் மருத்துவத்துடன் தொடர்பு அற்ற பலவிதமான பதிவுகளை பதிவு செய்துவரும் ஒருவராவார். இவற்றில் பல தன்னுடன் சம்மந்தப்பட்ட சம்பவங்களையே தொடர்புபடுத்தி அவர் பதிவு செய்துவருவதாக அதில் குறிப்பிடுவார். அவற்றில் சில அவரின் கற்பனையில் உதித்துள்ளதோ என மற்றவர்களுக்கு சந்தேகம் வரும்படியான சில பதிவுகளும் அவற்றில் இருக்கும். ஓரிரு நாட்களுக்கு முன் இந்திச் சாமியார் மாதவிடாய் தொடர்பாக கூறிய கருத்தை சிவச்சந்திரன் டொக்டர் நக்கல் அடித்து பதிந்த பதிவை சிலர் அவரது தெய்வவாக்காக நினைத்து உண்மை என கருதி முகப்புத்தகத்தில் பதிவு செய்து வருகின்றார்கள். ஆனால் அது நக்கல் பதிவே என்பதை பலரும் அறியவில்லை. அவரது பதிவை நாம் இங்கு அப்படியே தருகின்றோம். டொக்டரே அறிவியல்ரீதியாக சொல்லிப் போட்டார் என்று யாராவது நினைத்தால் அவர்கள் முட்டாள்கள்.
ஆனால் ஒன்று இந்த டொக்டர் போலவே அந்தச் சாமியாரும் மாதவிடாய் நேரத்தில் பெண்களை துன்புறுத்தாமல் இருக்கவும் ஆண்களையும் பெண்களுக்கு உதவி செய்து சமைத்து அவர்களுக்கு அந்த நேரத்தில் ஓய்வு கொடுக்க செய்வதற்காகவும் அவ்வாறான ஒரு கருத்தை இந்துக்களின் மத நம்பிக்கையை அடிப்படையாக வைத்து கூறியிருக்கலாம் என்றும் கருத இடமுண்டு என்பதையும் கவனிக்க வேண்டும் என அதே Consultant VOG ஆக இருக்கும் இன்னொரு வைத்தியர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அவரது கருத்தும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இது சிவச்சந்திரன் டொக்டரின் கருத்து
மாதவிடாயும் இந்து மதமும்
…………………………………………..
மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சமைக்கக்கூடாது என்று ஒரு சாமியார் சொன்னதை கலாய்கிறோம்.
உண்மையில் நம் இந்துமதத்தின் கொள்கைகளை அறியாதவர்கள் தான் இப்படி அறிவு பூர்வமான விடயங்களை கலாய்க்கிறார்கள்.
ஒருவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடம்பிலே இரத்தம் குறையும். அப்போது அவர் சூடான இடத்திலிருந்தால் அந்த சூட்டிலிருந்து உடம்பைப் பாதுகாக்க உடம்பில் போதிய இரத்தம் இல்லாததால் தோல் சிதைவடைந்து பாதிப்பு ஏற்படலாம். இதனால்தான் ஆண்களை விட பெண்கள் இளவயதிலேயே வயதானவர்கள் போல தோற்றமளிக்கிறார்கள்.
மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண் சூடான இடத்திலிருந்தால் அவளில் இருந்து வெளியேறும் இரத்தம் கொதித்து ஆவியாகும். அப்படி இரத்தம் கொதிக்கும்போது “ஏமாளிபோலிக்கமிலம்” என்ற நச்சுப் பொருள் உருவாகுமென அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். இந்த நச்சுப்பொருள் கலந்த ஆவி காற்றிலே பரவி வீட்டிலிருக்கும் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கோயில்களில் தீபம் காட்டும்போது ஏற்படும் சூட்டினால் இந்த அமிலம் உருவாகி கோயிலில் இருக்கும் மற்றவர்களையும் பாதிக்குமென்பதாலேயே அவர்களை கோயிலுக்குக் கூட சொல்லக்கூடாதென இந்து மதம் தடுத்துள்ளது.
இந்தக் காரணத்தால்தான் பிணம் எரியும் மயானங்களுக்கும் பெண்கள் செல்லக்கூடாதென்ற நீதி உருவாக்கப்பட்டது.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் சுவையரும்புகள் மாற்றமடைவதால் அவர்கள் சமையலில் அதிகம் உப்புச் சேர்ப்பார்கள். அதிகம் உப்புச் சேர்த்தால் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமே என்று யோசிப்பீர்கள். மாங்காயில் அமிலம் உள்ளது. அந்த அமிலத்தன்மையை குறைக்க உப்புடன் சாப்பிடுவோம். அதேபோல்தான் சாப்பாட்டில் போட்ட உப்பினை இரத்தம் சூடாகிவரும் ஏமாளிபோலி அமிலம் இல்லாமல் செய்துவிடும். இதை அறியாமல் அதிகமான உப்பு போட்ட சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடுவார்கள். உப்பினால்தான் பிரசர் நோய் வருவதாக விஞ்ஞானமே சொல்லியிருக்கிறது. விஞ்ஞானம் கண்டுபிடிக்க ஆயிரம் வருடங்களுக்கு முன்னமே நம்மவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.
இது பற்றிய இரண்டு சித்தர் பாடல்களைச் சொன்னால் பிரமித்துப் போவீர்கள்.
1. “ஆழியமுதம் அளவின்றிமுகர்ந்து குருதிகொதிகொண்டு
பருவத்தில் பாவம் கொள்வார்”
ஆழியமுதமென்றால் உப்பு. இதை அதிகம் முகர்ந்தால் , குருதி கொதிப்பு( பிரசர்) ஏற்பட்டு பருவத்திலேயே ( இளவயதிலேயே) பாவமான நிலைக்குப் போய்விடுவார்கள்.
2. “வானவன் கதிர்கொண்ட பூமகள்
சென்நிறம் வாயுவாகி தித்தித்து
வளம் மனை கெடுக்கும்”
இதற்கு கற்றுத் தேர்ந்த தமிழ் அறிஞர்களே சூரியனின் கதிர்போல சிவந்த கன்னம் கொண்ட பெண்ணைப் பார்த்து மயங்கிகிடந்த கணவன் வயலுக்குப் போகாமல் விட்டால் நிலம் கெட்டுப்போவதாக
பொய்யான அர்த்தம் சொல்லுவார்கள்.
இதன் உண்மையான அர்த்தம் சூரியனின் வெப்பத்தால் செந்நிற குருதி ஆவியாகி தித்திப்பு போன்ற அமிலமாகி காற்றிலே ( வாயுவாகி) கலந்து வீட்டிலிருக்கும் அனைவரின் வளத்தையும் கெடுக்குமென்பதாகும்.
இப்போது புரிகிறதா நம் முன்னோரின் மகிமை.
இதைப்பகிர்ந்து அந்த சாமியாரின் புகழ் நாசாவரை பரவி அவர் அடுத்த ஆஸ்கார் பெற உதவுங்கள்.
இது சிவாகரன் டொக்டரின் கருத்து
இந்தியாவில் ஒரு இந்துமதச் சாமியார் மாதவிலக்குக் காலத்தில் சமைக்கும் பெண்கள் அதைச் சாப்பிடும் ஆண்கள் அடுத்த பிறவியில் நாயாகவும் மாடாகவும் பிறப்பார்கள் என்று சொன்னதை எள்ளி நகையாடி பதிவு போடும் முகநூல் போராளிகள் எல்லோரும் தத்தமது வீட்டுப் பெண்கள் மாதவிலக்குக்கு உட்ப்பட்டிருக்கும் காலத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வது நல்லம்.
அன்றைய காலகட்டத்தில் மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் மாதவிலக்கின் போது இரத்தப்போக்கின் போது, ஏற்படும் உடலியல், மனோவியல் மாற்றங்களுக்கேற்ப பெண்களுக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமட்டும் ஆதரவாக இருக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட நடைமுறைகள் உண்மையான காரணம் மறக்கப்பட்டு மூடநம்பிக்கையான காரணம் கொடுத்து சொல்லப்படுவது பிழைதான். சொன்னவிதம் பிழை. ஆனால் சொல்லப்பட்ட காரணம் சரி என்பது யாருக்கும் தெரிந்த விடயம்.
அதற்காக மதத்தை இழிவு படுத்துவது தன்னைப் பெற்ற தாயை இழிவுபடுத்துவதற்கு சமனானது.
ஆனாலும் அந்தச் சாமியார் கடைசியாக சொன்ன “ஆண்களும் சமைக்க பழகிக் கொள்ளவேண்டும்” என்பதை தமது வசதிக்கு ஏற்ப மறைத்து விடுகிறார்கள் இந்த பொழிப்புரை போராளிகள்.

